

கிழக்கு லடாக்கில் ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்தச் சண்டையில் 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் இந்திய ராணுவ பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எல்லை தொடர்பான விவரங்கள் கொண்ட மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஆங்கில தொலைக்காட்சிக்குக் கூறும்போது, ‘சீனாவே 5 பேர் என்று கூறினால் நாம் அதை 3-ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
கடந்த மேமாதம் உதல் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவி அங்கு படைகளைக் குவித்து சில கட்டிட அமைப்புகளையும் உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ந்து கூறிவர ஆளும் பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருவது நடந்து வருகிறது.
இது தொடர்பாக ஆங்கில சேனலுக்கு கூறிய பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி, ‘2017-க்குப் பிறகே சீனா பரஸ்பர ஒப்பந்தங்களை மீறி வருகிறது. 20 பேர்தான் ஒரு ரோந்துப் படையில் இருக்க வேண்டும், ஆனால் சீனா 50-100 பேரை ஒப்பந்தத்துக்கு விரோதமாக அனுப்பி வருகிறது. இந்த பெரிய சீன ராணுவம் இந்திய ராணுவத்தினரை அச்சுறுத்தி வருகிறது. பல வேளைகளில் கைகலப்புகள் ஏற்படுகின்றன.’ என்றார்.
இந்நிலையில் கமாண்டர் மட்ட பேச்சு வார்த்தை 7-ம் கட்டமாக அடுத்தவாரம் நடைபெறுகிறது.