கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3 மக்கள் பிரதிநிதிகள் பலியானதால் சோகம்

அசோக் கஸ்தி எம்.பி., நாராயண் ராவ் எம்எல்ஏ., சுரேஷ் அங்கடி எம்.பி., (இடமிருந்து வலமாக)
அசோக் கஸ்தி எம்.பி., நாராயண் ராவ் எம்எல்ஏ., சுரேஷ் அங்கடி எம்.பி., (இடமிருந்து வலமாக)
Updated on
1 min read

கர்நாடகாவில் கடந்த 7 நாட்களில் 3-வது மக்கள் பிரதிநிதியாக நாராயண் ராவ் எம்எல்ஏ கரோனாவுக்கு பலியாகியிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் (65) கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் அஷ்வத் நாராயண் மற்றும் கோவிந்த் கார்ஜோள் என 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 50-க்கும் மேற்பட்ட எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.

இதில் எடியூரப்பா, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.80 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 8200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவுக்கு கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பீதரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. எனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நாராயண் ராவுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், உறுப்புகள் செயலிழப்பு தொடர்ந்த‌து.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் மறைவுக்கு முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனாவுக்கு கடந்த17-ம் தேதி பாஜக எம்பி அசோக் கஸ்தி பலியான நிலையில், நேற்று முன் தினம் பெலகாவி எம்.பி.,யும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி இறந்தார்.

கடந்த 7 நாட்களில் 3-வது மக்கள் பிரதிநிதியாக நாராயண் ராவ் எம்எல்ஏ கரோனாவுக்கு பலியாகியிருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in