

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
பிஹார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. ஆதலால், அதற்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா வைரஸ், பிஹாரில் மாநிலத்தில் பெய்த மழை, அதனால் உருவான வெள்ளம் போன்றவற்றால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது.
பிஹாரில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி ஆகியவை கரோனா வைரஸ் பரவல், மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதின.
ஆனால், பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கின. பிஹார் மாநிலத்துக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளைக் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் திட்டமிட்டபடி பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும், தள்ளிவைக்கப்படாது என்று கூறப்பட்டது. இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஊடகங்களைச் சந்திக்கிறார். அப்போது பிஹார் மாநிலத்தின் தேர்தல் தேதி குறித்த அட்டவணையை வெளியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்தத் தொகுதிகளுக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்ந்து ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும், 15 மாநிலங்களில் 64 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
அந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம். பிஹார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி காலியாகவே இருக்கிறது. அந்தத் தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவி்க்கப்படலாம்.
இந்த 64 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன. இந்த 27 தொகுதிகளும் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.