Last Updated : 23 May, 2014 09:56 AM

 

Published : 23 May 2014 09:56 AM
Last Updated : 23 May 2014 09:56 AM

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் மோடிக்கு எடியூரப்பா ‘திடீர் கடிதம்: மாநில பாஜக தலைவர் பதவி தாருங்கள்

தனக்கு மத்திய அமைச்சர் பதவி தர‌ வேண்டாம், மாறாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியை தருமாறு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த 'திடீர்' கடிதத்தால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் 3.63 லட்ச‌ம் வாக்குகள் வித்தியாசத்தில் எடியூரப்பா அமோக வெற்றி பெற்றார். அரசியல் செல்வாக்கு, மக்களின் ஆதரவு, ஆட்சி நடத்திய அனுபவம் ஆகிய காரண‌ங்களால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.

திடீர் கடிதம்

இந்நிலையில் நரேந்திர மோடிக்கு எடியூரப்பா எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. 3 பக்கங்கள் அடங்கிய அந்தக் கடிதத்தில், '' எனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டாம். தற்போதைய சூழலில் நான் மத்திய அமைச்சராக பதவியேற்றால் கர்நாடகாவில் பா.ஜ.க. எவ்வித வளர்ச்சியும் பெறாது. எனவே கட்சியை வளர்ப்பதற்காக என்னை மாநிலத் தலைவராக நியமித்தால் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா மத்திய அமைச்சர் பதவியை பெற வேண்டி பா.ஜ.க. தலைவர்களையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் திடீரென 'மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்' என மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது கர்நாடக பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பாவின் கடிதத்தைத் தொடர்ந்து தற்போதைய பா.ஜ.க. மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி வியாழக்கிழமை திடீரென டெல்லிக்கு சென்றார்.

அமைச்சர் பதவியை மறுப்பதேன்?

தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என எடியூரப்பா மறுத்ததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் தற்போது மத்திய அமைச்சராகி தேசிய அரசியலில் ஈடுபட்டால் அவரால் மீண்டும் மாநில அரசியலில் ஈடுபட முடியாது. தேசிய அரசியலில் அதிகபட்ச வளர்ச்சியே மத்திய அமைச்சர் வரைதான் என்பதால் எடியூரப்பா அதில் ஆர்வம் காட்டவில்லை.

மாநில அரசியலில் இருந்தால் மீண்டும் கர்நாடக‌ முதல்வராக முடியும். மேலும் தேசிய அரசியலிலும் கட்சியிலும் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் போதிய அழுத்தம் கொடுக்க முடியும். மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தற்போது தேசிய அரசியலில் குதித்தால் இத்துடன் தன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற அச்சத்திலே எடியூரப்பா இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அமைச்சராகும் ஆதரவாளர்கள்

எடியூரப்பா மத்திய அமைச்சர் பதவியை மறுத்தபோதும் அவருடைய நெருங்கிய ஆதரவாளருக்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர பா.ஜ.க. மேலிடத்தில் காய் நகர்த்தி கொண்டிருக்கிறார். மோடியின் அமைச்சரவையில் கர்நாடகாவில் இருந்து அனந்தகுமார், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா இடம்பிடிப்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளரான ஷோபா கரந்தலாஜேவிற்கு அமைச்சர் பதவியை பெற எடியூரப்பா தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x