மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல்? : சிஏஜி அறிக்கையில் தகவல்

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல்? : சிஏஜி அறிக்கையில் தகவல்
Updated on
2 min read

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 மற்ரும் 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியில் (CFI-consolidated fund of India) வைத்து பிற நோக்கங்களுக்காக அந்தத் தொகையைப் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்காளரான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ‘வருவாய் வரவுகளை அதிகப்படுத்தியும் நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்ட முடிந்துள்ளது’ என்று சிஏஜி அறிக்கை பகீர் தக்வலை வெளியிட்டுள்ளது.

ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அட்டர்னி ஜெனரலை மேற்கோள் காட்டி மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஜிஎஸ்டி நிதியிலிருந்து கொடுக்குமாறு சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் சிஏஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செஸ் வசூல் மற்றும் இதை ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் நிதிக்கு சேர்ப்பதான அறிக்கைகள் 8,9, 13 ஆகியவற்றின் தகவலின் படி தணிக்கை ஆய்வு கண்டது என்னவெனில் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதிக்கு தொகையைச் சேர்ப்பிப்பதில் குறைபாடு இருந்துள்ளது, அதாவது 2017-18 மற்றும் 2018-19-ல் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண்டிய ரூ.47, 272 கோடி சேர்க்கப்படவில்லை. இது ஜிஎஸ்டி இழப்பீடு சட்டம் 2017-ஐ மீறிய செயல், என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிதிகளின்படி ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் சட்டத்தின் படி, ஆண்டில் வசூல் செய்யப்பட்ட அனைத்து செஸ் வரித்தொகையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் எவ்வித குறையும் இன்றி சேர்க்கப்பட வேண்டும். இது பொதுக்கணக்கின் ஒரு அங்கமாகும். இது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியினால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடாக அளிக்கப்பட வேண்டிய தொகையாகும்.

மாநிலங்களுக்கு அளிக்க சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை என்று கூறிய மத்திய அரசு, ஜிஎஸ்டி செஸ் வரி வசூல் தொகையினை ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் வைக்காமல் இந்திய தொகுப்பு நிதியில் வைத்து பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியது.

அதாவது, ‘சட்டத்தில் எதற்காக இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அதற்குப் பயன்படுத்தாமல் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தியுள்ளது மத்திய அரசு. மேலும் இதனால் வருவாய் வரவை அதிகமாகவு, நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்டுமாறு நேர்ந்துள்ளது.

இந்த அறிக்கையில் விளக்கமாக கூறும்போது, “2018-19-ல் இந்த நிதிக்கு ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதே தொகை மாநிலங்களுக்கான இழப்பீடாகவும் அளிக்க ஒதுக்கப்பட்டது. மொத்தம் வசூலான ரூ.95,081 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் ஆக வசூல் செய்யப்பட்டதில் ரூ.54,275 கோடியைத்தான் இழப்பீடு நிதிக்கு மாற்றியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தணிக்கையாளரின் இந்த ஆய்வை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், ‘வசூலிக்கப்பட்ட செஸ் வரி ஆனால் பொதுக்கணக்கில் சேர்ப்பிக்கப்படாத தொகை அடுத்து வரும் ஆண்டில் சேர்ப்பிக்கப்படும்’ என்று கூறியதாகத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in