

விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக கடும் விமர்சனங்களை முன் வைத்தன.
“ஏழைகளைச் சுரண்டு நண்பர்களை வளர்க்கின்றனர்” என்றும், தொழிலாளர்களை எளிதில் வேலையை விட்டு அனுப்பும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர் என்று மோடி ஆட்சியின் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
மேலும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மீதும் மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை இயற்றி அதை மக்கள் நன்மைக்காகவே செய்கிறோம் என்று கூறி வருவதாக சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் பாஜகவை கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் விமர்சனங்களை எடுத்துரைக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதைப் புறக்கணித்து விட்டு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன.
இப்போது ஜனாதிபதியைச் சந்தித்து மனு கொடுக்கின்றனர். இதற்கு 300 நாட்கள் உள்ளன. இவ்வாறு திசையறியாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன, 70-80 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கிறது. யாரையும் பேசவேண்டாம் என்று தடைசெய்யவில்லை.
முக்கிய மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு விட்டன. எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வெட்கக் கேடானது. குறைந்தபட்ச ஆதாரவிலை போய்விடும் என்று விவசாயிகளைத் தூண்டி விடுகின்றனர், ஆனால் ஆதாரவிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டி முறை ஒழிந்து விடும் என்கிறார்கள், ஆனால் அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை, எதிர்கட்சிகள் செய்வது படுமோசம்.
அதே போல் தொழிலாளர்களுக்கான மசோதாக்கள் சம்பளம், சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது. 73 ஆண்டுகால சுதந்திரத்துக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு 3 பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. குறைந்த பட்ச ஊதியம், ஹெல்த் செக்-அப், ஆண்-பெண் சம ஊதியம், இவையெல்லாம் புரட்சிகர மாற்றங்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதிக்காமல் வெளிநடப்பு செய்து விட்டு தொழிலாளர் மசோதா தவறு என்று வெளியே போய் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறினார் பிரகாஷ் ஜவடேகர்.