Published : 25 Sep 2020 07:35 AM
Last Updated : 25 Sep 2020 07:35 AM

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: மத்திய வேளாண் அமைச்சர் கருத்து

புதுடெல்லி

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் வேளாண்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த கட்சியின்தலைவர்களுக்கு விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது. நாட்டுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. பொய்கள், வதந்திகளைப்பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும். அவர்கள் தங்களது விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைக்க முடியும்.

விதைக்கும்போதே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேளாண் சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். விவசாயிகளிடம் இருந்து வழக்கம்போல வேளாண்விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும். வேளாண் சந்தைகள் தொடர்ந்து செயல்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை, சட்டமாக இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. அந்த கட்சி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. அப்போது இதுதொடர்பாக சட்டம் இயற்றப்படாதது ஏன்?

தற்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க சந்தைகளுக்கு செல்கின்றனர். நாடு முழுவதும் 25 முதல்30 பெரிய வேளாண் சந்தைகள் செயல்படுகின்றன. அந்த சந்தைகளில் ஏலம் மூலம் விளைபொருட்கள் விற்கப்படுகின்றன. அங்கு நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.

இனிமேல் அந்த பிரச்சினை இல்லை. வேளாண் சந்தைக்கு வெளியேயும் விவசாயிகள் வணிகத்தில் ஈடுபடலாம். அதற்கு வரி விதிக்கப்படாது. விவசாயிகள், வணிகர்கள் இடையே எழும் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் மூலம் 30 நாட்களில் தீர்வு காண முடியும்.

ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் வணிகம் மேற் கொள்ளலாம். விவசாயிகள் விரும்பினால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x