

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகளைச் சேர்ந் 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் வரை அவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர். மேலும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும், கையொப்பமிடக்கூடாது என்று கூறி கோரி்க்கை மனு அளித்தனர்.
வேளாண் மசோதாக்களுக்குப் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களிடம் வேளாண் மசோதாக்கள் குறித்துக் கூறியதாவது:
“விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களையும் எதிர்க்கும் கட்சிகள் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள். விவசாயிகளைப் பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் இடைத்தரகர்களைப் பாதுகாக்கிறார்கள்.
இந்த 3 மசோதாக்களின் நோக்கமும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தொலைநோக்கு எண்ணத்தோடு பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட அம்சங்களாகும். நிச்சயமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் விவசாயிகளின் நலனை விரும்புபவர்கள் இல்லை. அவர்கள் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்கள்.
கோதுமை, அரிசி ஆகியவற்றை விவசாயிகளிடம் எந்த ஏற்றுமதியாளராவது நல்ல விலை கொடுத்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், அங்கு இடைத்தரகருக்கு இடமேயில்லை. பின்னர் எதற்காக இடைத்தரகருக்காக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமர் மோடியை எதிர்க்கவில்லை. ஆனால், கண்களை மூடிக்கொண்டு விவசாயிகளின் நலன்களைத்தான் எதிர்க்கிறார்கள்''.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.