Last Updated : 24 Sep, 2020 02:03 PM

 

Published : 24 Sep 2020 02:03 PM
Last Updated : 24 Sep 2020 02:03 PM

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்; இந்தியாவுக்கான உயர் தொழில்நுட்பங்களை டசால்ட், எம்பிடிஏ நிறுவனங்கள் இன்னும் வழங்கவில்லை: சிஏஜி அறிக்கையில் தகவல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், இந்தியாவுக்கான உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதாகக் கூறியுள்ள நிலையில், பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், ஐரோப்பிய ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ நிறுவனமும் இன்னும் வழங்கவில்லை என்று மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதாக ஒப்பந்தத்தில் உறுதியளித்த நிலையிலும் இன்னும் டசால்ட் நிறுவனமும் எம்பிடிஏ நிறுவனமும் வழங்கவில்லை. இந்தியாவில் குறிப்பிட்ட அளவு முதலீடு செய்திருக்க வேண்டும், தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும், இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எந்த ஒப்பந்தங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று சிஏஜி அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனம் தயாரித்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த எம்பிடிஏ நிறுவனம் விமானத்துக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ், இந்தியா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இதில் 10 ரஃபேல் போர் விமானங்களை இதுவரை டசால்ட் நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளது. இதில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்ஸில் இருக்கின்றன. மீதமுள்ள 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்து தற்போது விமானப் படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்களை டசால்ட் நிறுவனம், எம்பிடிஏ நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்கியது தொடர்பான தணிக்கை அறிக்கையை சிஏஜி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டசால்ட் நிறுவனம், எம்பிடிஏ நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 30 சதவீதம் உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) வழங்குவோம் எனக் கூறியிருந்தது. ஆனால், இதுவரை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான காவேரி எந்திரத்துக்கு பிரான்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த டிஆர்டிஓ அமைப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், இன்றைய தேதி வரை இரு நிறுவனங்களும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லை

இந்தியத் தொழில்துறைக்கு இதுவரை வெளிநாட்டிலிருந்து எந்தவிதமான நிறுவனமும் தங்கள் தொழில்நுட்பங்களை வழங்கவில்லை. இதனால்தான் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் துறையில் பாதுகாப்புத்துறை 62-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தில் 30 சதவீதத்தை இந்தியாவில் செலவிட வேண்டும், அதாவது உதிரிபாகங்களை கொள்முதல் அல்லது, புதிய ஆராய்ச்சி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த விதிமுறைகள் அனைத்தும் ரூ.300 கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து இறக்குமதிக்கும் பொருந்தும். இந்த வெளிநாட்டுக் கொள்கைகளை அந்நிய நேரடி முதலீடு, தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருதல், இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களைக் கொள்முதல் செய்தல் போன்றவை மூலம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் இந்தியாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை. தங்களின் உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை.

பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளிநாடுகளுக்கான கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு விளைவுகளைக் கொடுக்கவில்லை. ஆதலால், தங்களின் கொள்கைகளை மறு ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தி, தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x