Last Updated : 01 Sep, 2015 08:32 AM

 

Published : 01 Sep 2015 08:32 AM
Last Updated : 01 Sep 2015 08:32 AM

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை: ஜெயின் சமூகத்தினர் விரதம் இருந்து உயிர் துறக்க அனுமதி

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஜைனர்களின் மதச் சடங்குக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.

நாட்டில் உள்ள ஜைனர்கள் சிலர் தங்கள் இறுதி காலத்தை அமைதியான முறையில் கழிக்க சாகும் வரை உண்ணாவிரதம் (சந்தாரா மதச்சடங்கு) மேற்கொள் கின்றனர். பெரும்பாலும் உடல் நலம் குன்றியோர், தீராத நோய் வாய்பட்டோர், வயது முதிர்ந்தோர், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் கவுரவமான முறையில் தங்கள் இறுதி காலத்தை கழிக்க இந்த சடங்கை பின்பற்றுகின்றனர். இதை வடக்கிருந்து உயிர்த் துறத்தல் என்றும் கூறுகின்றனர்.

ஜைனர்களின் இந்த மதச் சடங்குக்கு ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் கடந்த வாரம் தடை விதித்தது. இந்த சடங்கு தற் கொலைக்கு தூண்டுவதுபோல உள்ளது. இது சட்டவிரோதம் என்று கூறி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 10-ம் தேதி தடை விதித்தது. இதற்கு ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களில் உள்ள ஜைனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு உட் பட பல மாநிலங்களில் உள்ள ஜைனர் கள் கண்டன பேரணி நடத்தினர்.

இந்நிலையில் பல்வேறு ஜைன அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

ஆத்மாவை தூய்மைப்படுத்தும் சடங்குதான் சந்தாரா. ஒருவர் மோட்சம் அடைவதற்கு பின்பற்றும் சடங்கை தற்கொலையுடன் ஒப்பிட்டது தவறு. நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட விஷயங்களை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் சட்டப்படி உரிமை உள்ளது. அதை யாரும் குலைக்க கூடாது. ஜைன மத தத்துவங்களை கவனத்தில் கொள்ளாமல், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

பின்னர் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு, ராஜஸ்தான் மாநில அரசு, மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x