Published : 24 Sep 2020 07:51 AM
Last Updated : 24 Sep 2020 07:51 AM

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி வழங்கிய இளைஞர்

கரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.3.75 லட்சத்தை செலவிட்டு அரிசி, காய்கறிகளை வழங்கி வந்திருக்கிறார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்தவர் தோசாபதி ராமு (28). ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருந்த லக்ஷ்மம்மா என்ற பெண்மணி, தினமும் ஏராளமானோருக்கு உணவு வழங்கி வந்ததை ராமு பார்த்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கரோனாஊரடங்கால் வேலையிழந்திருக் கும் வெளிமாநிலத் தொழிலாளர் களுக்கு தாம் இலவசமாக உணவு வழங்கி வருவதாக லக்ஷ்மம்மா கூறியுள்ளார். மேலும், தனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை இதற்காக செலவிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

லக்ஷ்மம்மாவின் இந்த பதிலால் நெகிழ்ந்துபோன ராமு, ஏழைப் பெண்மணி ஒருவரால் இத்தனை பேருக்கு உணவு வழங்கும்போது, ஏன் நம்மால் இதை செய்ய முடியாது என எண்ணியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று தமது பகுதியான எல்.பி. நகரில் அரிசி ஏடிஎம் ஒன்றை ராமு தொடங்கினார். இங்கு வந்து உதவி கேட்கும் அனைவருக்கும், அவர்களின் தேவைக்கு ஏற்ப அரிசியையும், காய்கறிகளையும் ராமு இலவசமாக வழங்கி வந்திருக்கிறார்.

இதற்காக தனது சொந்த பணத்திலிருந்து ரூ.3.75 லட்சத்தை அவர் செலவு செய்துள்ளார். இதில் ரூ.3.2 லட்சத்தை தனதுதொழிலாளர் வைப்புக் கணக்கில்இருந்து (பி.எப்) ராமு எடுத்திருக்கிறார். இவ்வாறு கடந்த 21-ம் தேதிவரை (160 நாட்கள்) ஆயிரக்கணக் கான மக்களுக்கு இலவசமாக அரிசியையும், காய்கறியையும் ராமு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ராமு கூறும்போது, “உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதே உயர்ந்த மனித மாண்பு என்பதை லக்ஷமம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்குவதற்கு சில லட்சங்களை செலவிடுவது தவறு இல்லை எனத் தோன்றியது. இதில் கிட்டத்தட்ட எனது முழு சேமிப்பும் கரைந்துவிட்டது. ஆனால், சுமார் 16 ஆயிரம் குடும்பங்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது, செலவிடப்பட்ட பணம் பெரிதாக தெரியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x