Published : 24 Sep 2020 07:50 AM
Last Updated : 24 Sep 2020 07:50 AM

கரோனா வைரஸ் தடுப்பூசி 100 சதவீத பலன் அளிக்காது: ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா விளக்கம்

கரோனா தடுப்பூசி 100 சதவீதம் அளவுக்கு பலன் அளிக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) பொது இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் 75 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழகம், கேரளா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியாவில் சுமார் 30 கரோனாதடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்துநிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்', குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ்-டி' கரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிட் ஷீல்டு' என்றகரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சீரம்இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து வருகிறது. இதேபோல ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி' என்ற கரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லெபாரேட்டரீஸ் இந்தியாவில் விநியோகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த 4 தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா நிருபர்களிடம் கூறியதாவது:

நுரையீரலை பாதிக்கும் நோய்களுக்கான எந்த தடுப்பூசியும் 100% பலன் அளிப்பது கிடையாது. இதை கருத்தில் கொண்டே 50 சதவீத பலன் அளிக்கும் கரோனா தடுப்பூசியை ஏற்றுக் கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாம் 100 சதவீத பலன் அளிக்கும் கரோனா தடுப்பூசியை எதிர்பார்க்கிறோம். எனினும் கரோனா தடுப்பூசியின் பலன் அளிக்கும் தன்மை 50 சதவீதம் முதல் 100 சதவீதத்துக்குள் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x