Last Updated : 27 Sep, 2015 08:59 AM

 

Published : 27 Sep 2015 08:59 AM
Last Updated : 27 Sep 2015 08:59 AM

மேகேதாட்டு, கலசா-பண்டூரி திட்ட விவகாரம்: கர்நாடகாவில் முழுஅடைப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேகேதாட்டு, கலசா-பண்டூரி திட்டங்களை எதிர்க்கும் தமிழக அரசு, கோவா மாநில அரசுகளைக் கண்டித்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேகேதாட்டு பகுதியில் காவிரியில் புதிய அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடகாவின் கலசா-பண்டூரி என்ற இடத்தில் மகதாயி ஆற்றில் கால்வாய் அமைக்க கோவா மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றக் கோரி கர்நாடக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாகவும் தமிழக, கோவா மாநில அரசுகளைக் கண்டித்தும் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி மற்றும் கன்னட அமைப்புகளின் சார்பில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு 1080 அமைப்புகள் ஆதரவு அளித்தன.

தலைநகர் பெங்களூருவில் கடைகள், சந்தைகள், ஓட்டல்கள், மால்கள், பெட்ரோல் நிலையங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.

உள்ளூர், வெளியூர் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. டாக்ஸி, ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள் வாடகை டாக்ஸி கிடைக்காமல் பரிதவித்தனர்.

பெங்களூரு மட்டுமன்றி மைசூரு, ஹூப்ளி, பெலகாவி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முழுஅடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

கர்நாடகாவில் இருந்து தமிழகம், கோவா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து பால், காய்கறிகள், உணவுப் பொருள்கள் சரக்கு லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் இருந்து கர்நாடகா புறப்பட்ட அரசு பஸ்கள் மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் இருந்து மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இயக்கப் படவில்லை. ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் பண்ணாரி அருகே நிறுத்தப்பட்டன.

12 மணி நேர முழுஅடைப்பால் கர்நாடகா முழுவதும் நேற்று இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x