Published : 24 Sep 2020 06:51 AM
Last Updated : 24 Sep 2020 06:51 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் கையெழுத்திட வலியுறுத்தி பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையெழுத்திட வலியுறுத்தி பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து அல்லாத வேற்று மதத்தவர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தால், அவர்கள் அங்குள்ள மதப் பதிவேட்டில் ஏழுமலையான் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திடுவது வழக்கம்.

இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேற்று மதத்தை சேர்ந்த முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, கண்டிப்பாக திருப்பதி கோயிலுக்கு செல்லும்போது, மதப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

இதனிடையே, “ மதப் பதிவேடு என்பதே அவசியம் இல்லாதது. ஆதலால், முதல்வர் ஜெகன் அதில் கையெழுத்து போட தேவையில்லை. மதப் பதிவேட்டு முறையை நீக்குவதே சரி” என ஆந்திர அமைச்சர் கொடாலி நானி கூறியிந்தார்.

இதேபோல், எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா நேற்று கூறுகையில், “முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை. மேலும், 25 வருடங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டிதான் ஆந்திர முதல்வர். இதை யாரும் மாற்ற முடியாது. அவர்தான் ஒவ்வொரு பிரம்மோற்சவத்திற்கும் மத பதிவேட்டில் கையெழுத்திடாமல் சுவாமிக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக கொடுப்பார். எனவே திருப்பதி ஏழுமலையான் கோயி்லில் உள்ள மத பதிவேட்டில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையெழுத்திட வேண்டிய அவசியமே இல்லை“ என்றார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் முன், அங்குள்ள மத பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பாஜக, தெலுங்கு தேசம், பஜ்ரங் தள் உட்பட பல்வேறு அமைப்பினர் தீவிர ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடரந்து அப்பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சாலை மறியல்

சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டதால் சிறிது நேரம் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டிற்கு முன் பஜ்ரங் தள் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர். இதேபோன்று, திருப்பதியில் முன்னாள் எம்எல்ஏ சுகுணம்மாள் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீஸார் வீட்டு காவலில் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x