Published : 24 Sep 2020 06:47 AM
Last Updated : 24 Sep 2020 06:47 AM

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமைதிப் போராட்டம்; வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா மக்களவையில் கடந்த 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இரு மசோதாக்களும் கடந்த 20-ம் தேதி மாநிலங்களவையில் கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது.

இதேபோல மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த 3 வேளாண் மசோதாக்களுக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முடியும்வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் நேற்று புறக்கணித்தன. எனினும் தொழிலாளர் வரைவு மசோதாவில் 4-ல் மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இதுவரை 25 எம்.பி.க்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பாலும் 8 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை அமைதி போராட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி சிலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரை அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டிஆர். பாலு மற்றும் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் நேரம் கோரப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு பிரதிநிதியை சந்திக்க குடியரசுத் தலைவர் அலுவலகம் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று மாலை சந்தித்து மனு அளித்தார். இதன்பின் குலாம் நபி ஆசாத் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வேளாண் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தன்னிச்சையாக வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சாசனம் மீறப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது. அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தரப்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் 31 விவசாய சங்கங்கள் பங்கேற்கின்றன. ஹரியாணாவிலும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x