

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக கவலைக்குரிய விதத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் தன்னம்பிக்கை பெற்று புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள ராஜயோகம் பழக வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அளித்துள்ள தகவலின்படி விவசாயிகளின் குடும்பப் பிரச்சினை, மதுப்பழக்கம், காதல் விவகாரம், ஆண்மைக்குறைவு உள்ளிட்டவையே தற்கொலைக்குக் காரணம் என அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்து சர்ச்சையில் சிக்கினார் ராதாமோகன்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் மத்தியில் பேசிய ராதாமோகன், "விவசாயிகள் ராஜயோகாவை பழக வேண்டும். இதன்மூலம் அவர்கள் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி அதன் வாயிலாக விதைகளின் சக்தியைக் கூட்ட முடியும்.
மேலும், மண் வளத்தையும் அதிகரிக்க முடியும். பரமாத்ம சக்தி மூலம் இது சாத்தியமாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் வளத்தையும் பெருக்கலாம். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் அமைதி, அன்பு, தெய்வீகத்தின் அதிர்வுகளை விதைகளுக்கும் தன்னுடைய நிலத்திற்கும் தர முடியும்" என்றார்.
இது எவ்வளவுதூரம் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இயற்கை வேளாண் முறையை அங்கீகரிப்பதுபோல் மத்திய வேளாண் அமைச்சகம் ராஜயோகா மூலம் விவசாயம் செய்வதையும் அங்கீகரிக்கிறது" என்றார்.