

வேளாண் மசோதாக்கள் மீதான எதிர்கட்சிகளின் எதிர்ப்பு தொடர்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலம் நடத்திய எம்.பிக்கள், இன்று மாலை குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்.
நேற்று முதல் மாநிலங்களவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் எதிர்கட்சி எம்.பிக்கள் புறக்கணித்து வருகின்றனர். எனினும், இன்று நாடாளுமன்றம் வந்தவர்கள் அதன் வளாகத்தில் தம் எதிர்ப்புகள் வெளிப்படுத்தினர்.
இன்று காலை காந்தி சிலை முன்பாக மத்திய அரசை எதிர்த்து பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள். பிறகு அனைவரும் வளாகத்தின் உள்ள அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் திமுகவின் மூத்த எம்.பியான திருச்சி சிவா கூறும்போது, ‘விவசாய நலனுக்கு எதிரான மசோதாக்களை நாடாளுமன்ற மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ளனர். ஜனநாயகத்தின் ஆலயம் என வர்ணிக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் மரபுகள் சிறிதும் காக்கப்படவில்லை.
இதை எதிர்க்கும் வகையில் அனைத்து எதிர்கட்சிகளும் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இன்று மாலை எதிர்கட்சிகள் அனைவரும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளோம்.
அவரிடம், இந்திய அரசியல் அமைப்பின் 11 ஆவது பிரிவின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்துவோம். இது, மக்களின் பிரச்சனை என்பதால் அதை நாம் எதிரொலிக்கிறோம்.’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத்தின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அனைத்து எம்.பிக்களும் கூடிப் பேசினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இன்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மதியம் 3.00 மணிக்கு கூடவிருக்கும் மக்களவையில் இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு இவர்களும் மாநிலங்களவை எம்.பிக்களுடன் குடியரசு தலைவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.