Last Updated : 23 Sep, 2020 02:53 PM

 

Published : 23 Sep 2020 02:53 PM
Last Updated : 23 Sep 2020 02:53 PM

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப் போராட்டம் 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள இரு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்ற சுற்றுப்புற வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

‘விவசாயிகளைக் காப்போம்’, ‘தொழிலாளர்களைப் பாதுகாப்போம்’, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என எழுதப்பட்ட பதாகைகளைக் கையில் ஏந்தி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஊர்வலம் வந்தனர். அதன்பின் நாடாளுமன்றத்தில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிறு அன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எறிந்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் 8 எம்.பி.க்களைக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவி்ட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும் வரை அவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர். இதனால் அவைக்கு நேற்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த எம்.பி.க்களும் செல்லவில்லை. ஆனால், மன்னிப்புக் கோரினால், 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையும் திரும்பப் பெறப் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மேலும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நேற்று அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்தச் சூழலில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பதாகைகளை ஏந்தி அமைதியாகப் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தைச் சுற்றி வந்த எம்.பி.க்கள், அம்பேத்கர் சிலை முன் கோஷமிட்டனர். அதன்பின் மகாத்மா காந்தி சிலை முன் அமர்ந்து வேளாண் மசோதாவுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து மாநிலங்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸ் மற்றும் அதே ஒத்த மனநிலையில் இருக்கும் கட்சி்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து அம்பேத்கர் சிலைவரை ஊர்வலம் சென்றோம்.

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக மத்திய அரசு செயல்படுவதைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றோம். நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றி, ஜனநாயகம் இல்லாத வகையில் மோடி அரசு நடத்துகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, போராட்டம் நடத்தும் முன் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் அறையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இடவேண்டாம் எனக் கூறியும், மசோதாவைப் பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் இன்று மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எம்.பி.க்கள் சந்தித்து மனு அளிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x