

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி பேரணி மேற்கொள்ள முயற்சித்த போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார்.
பேரணியில் பங்கேற்க வந்த அவரது ஆதரவாளர்கள் 35 பேரும் அவருடன் கைது செய்யப் பட்டனர்.
இணையதளங்களில் இது தொடர்பாக தேவையற்ற புரளிகள் வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு அத்தகைய செய்திகள் பரவாமல் தடுக்க மாநிலத்தில் மொபைல் இணையதள சேவைக்கு குஜராத் அரசு நிர்வாகம் தடைவிதித்தது.
வன்முறை இல்லை
உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்த முற்பட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்ததும் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹர்திக் குற்றச்சாட்டு
கைதுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய ஹர்திக் படேல் கூறிய தாவது:
எங்கள் சமூகத்தினரின் குரலை ஒடுக்க குஜராத் மாநில அரசு முயற்சிக்கிறது. மாநிலத்தில் வன்முறை வெடிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் மறைமுக விருப்பம். இந்த செயல் ஜனநாயக நெறிகளுக்கு முரணானது.
இவ்வாறு அவர் கூறினார்.
கவனத்தை ஈர்த்தவர்
குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரும் போராட்டத்தை ஹர்திக் படேல் முன்னின்று நடத்தி வருகிறார். சூரத் நகரில் செப்டம்பர் 19-ல் பேரணி நடத்தப் போவதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். இதனால் நேற்று அதிகாலை முதலே சூரத் நகரின் மங்கத் சவுக் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இங்கிருந்துதான் ஹர்திக் படேல் பேரணியை தொடங்குவதாக இருந்தது. பேரணியை தொடங்க அப்பகுதிக்கு வந்த ஹர்திக் படேலை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
‘முன்அனுமதி பெறவில்லை'
ஹர்திக் கைது குறித்து சூரத் நகர போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானா கூறும்போது, “ஹர்திக் படேல், போலீஸ் முன்அனுமதி பெறாமல் பேரணி நடத்த முயன் றார். அதனால், அவரையும் அவரது ஆதரவாளர்கள் 35 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்துள்ளோம். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது” என்றார்.