

தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை ரூ.5.5 லட்சமாக உயர்த்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) திட்டமிட்டுள்ளது.
இந்த அமைப்பின் ஒரு அங்கமான, ஓய்வூதியம் மற்றும் இடிஎல்ஐ அமலாக்கக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது தொடர்பான திட்ட முன்வடிவு குறித்து பரிசீலிக்கப்படும். இதற்கு இக்குழு ஒப்புதல் அளித்துவிட்டால், பிஎப் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அறங்காவலர்கள் மத்திய வாரியத்தின் (சிபிடி) ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தலைமையிலான இந்த வாரியம், ஒப்புதல் அளித்துவிட்டால் இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதன்மூலம் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட பிஎப் சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேருவதற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.6,500 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இதுபோல் சந்தாதாரர்கள் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச காப்பீடு ரூ.1.56 லட்சத்திலிருந்து ரூ.3.6 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதாவது இடிஎல்ஐ திட்டத்தின் கீழ், பிஎப் சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்த பிறகு திடீரென இறந்துவிட்டால், அவர் கடைசியாக 12 மாதத்தில் பெற்ற ஊதியத்தைப் போல 20 மடங்கு தொகை 20 சதவீத ஊக்கத் தொகையுடன் அவரது வாரிசுக்கு வழங்கப்படும். அதேநேரம் இதற்கான உச்சவரம்பு இப்போது ரூ.3.6 லட்சமாக உள்ளது.