கடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இல்லாமல் அடக்குமுறை சட்டங்களினால் மக்களை திண்டாட வைக்கின்றனர்: மத்திய அரசு மீது தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம்

கடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இல்லாமல் அடக்குமுறை சட்டங்களினால் மக்களை திண்டாட வைக்கின்றனர்: மத்திய அரசு மீது தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம்

Published on

அடக்குமுறை சட்டங்களை இயற்றி பொதுமக்களை திண்டாட வைப்பதாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார். கரோனா தொடர்பான புதிய சட்ட முடிவின் விவாதத்தில் அவர் மக்களவையில் இதை தெரிவித்தார்.

இதன் மீது தென் சென்னை தொகுதியின் திமுக எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் நிகழ்த்திய உரையில் பேசியதாவது:

கரோனா தன் கொடூர முகத்தைக் காட்டிய போது, மக்களைக் காப்பாற்றி பாதுகாப்போடு பராமரிக்க வேண்டிய கட்டாயக் கடமை, பொன்னான வாய்ப்பு அப்போது கிடைத்தது.

ஆனால் அதனைப் புறக்கணித்து விட்ட பிரதமர், தனது கவனத்தை எல்லாம் டிரம்ப்பை மகிழ்வித்து உபசரிப்பதில் தான் செலுத்தி வந்தார். துயரம் வந்த பின் அதனை தீர்க்க முயல்வதை விட, அது வருவதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்திவிட வேண்டும்.

இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளில் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்திய அரசோ உரிய முன்னேற்பாடுகளைச் செய்யாதக் காரணத்தால் தான் நமது நாடு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

நோய்த்தொற்று காலத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கானவர்கள் வேலை இழப்புக்கு உள்ளாயினர். நாடு மிகப் பெரும் பொருளாதார நசிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

குடிமக்கள் பதிவேடு, குடிமக்கள் திருத்தச் சட்டம் போன்ற கடும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்மூலமாக இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு உள்ளது.

இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 13 ஆம் நூற்றாண்டில் மக்கள் பியூபானிக்புளூ நோயால் பீடிக்கப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் புளூ போன்ற நச்சு வியாதிகளை மக்கள் எதிர்கொண்டனர்.

அப்போதெல்லாம் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக சார்ந்திருந்து அவர்களின் துயர் துடைத்தனர். ஆனால் இந்த அரசோ அடக்குமுறைச் சட்டங்களின் மூலமாக மக்களைத் திண்டாட விட்டுவிட்டனர்.

2014 இல் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இயற்கைப் பேரழிவுக் காலத்தில் எத்தகைய நடைமுறைகளைக் கையாளவேண்டும் என்று இந்த ஒப்பந்தம் தெளிவாக்கி உள்ளது.

ஆனால் மத்திய அரசு இவற்றைப் புறக்கணித்துவிட்டு முறையான திட்டமிடல் இன்றிச் செயல்பட்டு மக்களை தவிக்கவிட்டு விட்டது. காலனி ஆதிக்கச் சட்டங்கள் போன்று அடக்குமுறை ஆணைகள் மக்களை ஆட்டிப் படைத்தன.

கரோனா எனும் நச்சுத் தொற்றால் இந்த நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அபாயகரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் மாணவர்கள் தேர்வுக்கு சென்றால் அவர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்ற சூழ்நிலையில் தான் நீட் தேர்வை நிறுத்தி வையுங்கள் என்று மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள்.

ஆனால் அந்த குரலை இந்த மத்திய அரசு கேட்காமலேயே போய் விட்டது. அதனால் தான் தமிழகம் பல மாணவ,மாணவியரின் மரணங்களைச் சந்திக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவர் என்பவர் 40 ஐரோப்பிய மருத்துவர்களுக்கு சமமாக கருதப்படுகிறார். இத்தகைய ஆற்றல் மிகுந்த ஆற்றலை குலைக்கும் வகையில் நீட் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

எனவேதான் எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து நீட் தேர்வை நிறுத்தி விடுங்கள் என்று வற்புறுத்தல் கொடுத்துக்கொண்டு வருகிறார்.

கலைஞரின் ஆட்சி காலத்திலும் அவர்கள் பள்ளிப் படிப்பின்போது பெற்ற மதிப்பெண்களை வைத்து உயர் வகுப்புகளில் இடம் வழங்குவது என்ற வாய்ப்பைக் கொடுத்தார்.

அமெரிக்க நாடு கூட இத்தகைய கல்வித்துறை அணுகுமுறைகளை சேர்க்கலாமா? என்று ஆய்வு செய்யும் அளவுக்கு கலைஞருடைய திட்டங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தன.

கரோனா எனும் இப்பேரழிவுக் காலத்தில் மிக முக்கியமான பங்களிப்பை காவல்துறையினர், மருத்துவர்கள், நர்ஸ்கள், துப்புரவு பணியாளர் போன்றோர் வழங்குகின்றனர். அவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயக் கடமை இந்த அரசுக்கு நிச்சயமாக உண்டு.

எனவே கரோனா காலத்தில் மட்டும் உரிய வசதிகள் செய்வது என்ற நிலைப்பாட்டைத் தாண்டி அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து போன்ற வசதி வாய்ப்புகளை மத்திய அரசு தடை செய்து விட்டது. மக்களின் இடப் பெயர்ச்சி அதிகமானது.

காலனியாதிக்கக் காலத்தின் சட்டங்கள் போன்று இவையெல்லாம் அமைந்து இருக்கின்ற காரணத்தால் மக்கள் மிகக்கொடுமையான காலகட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில அரசுகளின் அதிகாரங்களை மீண்டும் மீண்டும் தட்டிப்பறித்து கொள்கின்ற வகையில் தான் இத்தகைய மசோதாக்கள் அமைந்திருக்கின்றன.

பண்டையச் சீனப் பாரம்பரிய மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி சீன அறிஞர் மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தார். அதேபோல இந்தியத் தொன்மை மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு கரோனா தடுப்பு மருந்து

கண்டுபிடிக்க இந்திய மருத்துவ நிபுணர்களை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in