Last Updated : 15 Sep, 2015 09:28 AM

 

Published : 15 Sep 2015 09:28 AM
Last Updated : 15 Sep 2015 09:28 AM

கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை எதிரொலி: தசரா திருவிழாவை எளிமையாக கொண்டாட முடிவு

கர்நாடகாவில் தொடரும் விவசாயி கள் தற்கொலை, கடும் வறட்சி ஆகிய பிரச்சினைகள் காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா திருவிழாவை எளிமையாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மிச்சமாகும் பணம் விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றது. மாநில அரசு ஆண்டுதோறும் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதுகுறித்து மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, வறட்சி, கடன் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும் போது, “விவசாயிகளின் தற் கொலை, கடும் வறட்சி ஆகிய பிரச்சினைகள் காரணமாக மைசூரு பகுதி மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் துயர நிலையில் இருக்கும் போது, கோடிக்கணக்கில் செலவிட்டு தசரா திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவது ஏற்புடையதாக இருக்காது. தற் கொலை செய்துகொண்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை இருப்பதால், இந்த ஆண்டு தசராவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க முடியாது. அதே நேரத்தில் பாரம்பரியம் கெடாமல் தசரா விழா எளிய முறையில் கொண்டாடப்படும்” என அறிவித்துள்ளார்.

இதையடுத்து மாநில வருவாய்த் துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சரு மான சீனிவாச பிரசாத் தசராவை எளிமையாகக் கொண்டாடுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். மேலும் மைசூரு மகாராஜா குடும்பத்தினருடனும், சாமூண்டீஸ்வரி கோயில் நிர்வாகிக ளுடனும் ஆலோசனை நடத்தினார்.

விவசாயி தொடங்கி வைக்கிறார்

பின்னர் சீனிவாச பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு மைசூரு தசரா விழா வரும் அக்டோபர் 14-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை விவசாயி ஒருவர் விழாவை தொடங்கி வைப்பார். விஜயதசமி பண்டிகையான அக்டோபர் 23-ம் தேதி யானை ஊர்வலம் (ஜம்பு சவாரி) எளிய முறையில் நடைபெறும்.

தசரா விழாவுக்கான செலவைக் குறைக்கும் வகையில் வெளிமாநில, வெளிநாட்டு கலைக் குழுவினரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. உள்ளூர் கிராமிய கலைஞர்களைக் கொண்டு விவசாயிகள் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் மாநிலத்தில் நிலவும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மைசூரு மாநகர தெருக்கள், அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட மாட்டாது.

விழாவின்போது வழக்கமாக நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், உணவு திருவிழா, கலாச்சார திருவிழா, பட்டாசு வெடிப்பது உள்ளிட்டவை இந்த ஆண்டு ர‌த்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் வருமானத்தைப் பெருக் கும் நோக்கில் மலர் கண்காட்சி, பொருட்காட்சி, கவியரங்கம், விவ சாயிகள் தசரா, தீப்பந்த விளை யாட்டு ஆகியவை நடத்தப்படும்.

கடந்த ஆண்டு தசரா ஊர்வலத்துக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.4 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மிச்சமாகும் பணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x