

மும்பை மற்றும் புறநகரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பருவமழையில் அதிகபட்சமாக 280 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்னும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
தென்மேற்குப் பருவமழை இந்த மாதத்துடன் முடிகிறது என்பதால், தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலோரப் பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்து வருகிறது.
மும்பை மற்றும் புறநகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை , நேரம் செல்லச் செல்லச் தீவிரமடைந்தது. இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது மழை வெளுத்து வாங்கியது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த ஆண்டு பருவமழை சீசனில் இல்லாத அளவுக்கும், மிக அதிகபட்சமாகவும் 280 மில்லி மீட்டர் மழை பதிவானது. புதன்கிழமையும் கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையத்தின் மும்பை மைய துணை இயக்குநர் ஹோசலிக்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையின் மேற்கு புறநகரான சான்டாகுரூஸ் பகுதியில் 286.4 மி.மீ. மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவானது. இதுமகாராஷ்டிரா மாநில வரலாற்றிலேயே 4-வது அதிகபட்ச மழைப்பொழிவாகும். தெற்கு மும்பைப் பகுதியான கொலாபாவில் 147.8 மி.மீ. மழை நேற்று பதிவானது.
இதற்கு முன் கடந்த 1981-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ம் தேதி சான்டாகுருஸ் பகுதியில் 318.2 மி.மீ மழையும், அதன்பின் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 312.4 மி.மீ. மழையும் பதிவானது. மூன்றாவதாக 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி 303.7 மி.மீ. மழை பதிவானது.
மும்பை மற்றும் புறநகரில் நேற்று பெய்த 286.4 மி.மீ. மழை என்பது 4-வது அதிகபட்ச மழையாகும். மும்பையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 120 மி.மீ. அளவுக்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்துள்ளது. ராமர் கோயில் பகுதியல் 298 மி.மீ. மழையும், தாஹிசர் பகுதியில் 190 மி.மீ. மழையும் பதிவானது.
நவி மும்பை, திவாலே பகுதியில் 304 மி.மீ., நேருல் 301.7 மி.மீ., சிபிடி பேலாபூர் 279.8 மி.மீ., சான்பாடா 185.1 மி.மீ., வாஷி 179.5 மி.மீ, கான்சோலி பகுதியில் 136.9 மி.மீ. மழை கடந்த 24 மணி நேரத்தில் பொழிந்துள்ளது.
தானே நகர், கோப்ரி பகுதியில் 195.3 மி.மீ. மழையும், சிராக் நகரில் 136.5 மி.மீ. மழையும், தோகாலி பகுதியில் 127 மி.மீ. மழையும் பதிவானது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து சான்டா குருஸ் பகுதியில் மட்டும் 3,571.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கொலாபாவில் 3,147.3 மி.மீ.மழை பதிவானது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.