Last Updated : 22 Sep, 2020 09:32 PM

 

Published : 22 Sep 2020 09:32 PM
Last Updated : 22 Sep 2020 09:32 PM

லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? - நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி

கோப்புப் படம்

புதுடெல்லி

லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? என நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்சியின் தருமபுரி எம்.பி.யான டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் திவால் திருத்த மசோதாவின் விவாதத்தில் பேசிய போது இதை குறிப்பிட்டார்.

இது குறித்து திமுக எம்.பி.யான செந்தில்குமார் மக்களவையில் பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சீரமைக்க வசதியாக திவால் திருத்தமசோதா கொண்டு வரப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அது ஒரு வகையில் சரியான நடவடிக்கையாக இருந்தாலும்,, அத்தகைய சூழல் உருவானதற்கு என்ன காரணம்? என்று பார்த்தோமானால் ஊரடங்கு நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக தெரியும்.

குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு போதிய வசதிகள் செய்யப்படாமலேயே மார்ச் 24-ம் தேதி அவசர கதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தபடியே தங்கள் ஊருக்கு திரும்பிய அவலமான நிலை உருவானது. மார்ச் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சில ஆயிரங்களாகவே இருந்தன.

ஆனால் அதை கட்டுப்படுத்த திட்டமிட்ட ஊரடங்கை செயல்படுத்தாததால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் திவால் மசோதாவில் நிறுவனங்கள் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறோம்.

ஆனால், நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களை கிஞ்சித்தும் நினைக்கவில்லை. நிறுவனங்களை பழைய நிலைக்குக் கொண்டு வர பாடுபடும் தொழிலாளர்கள் நலனை இந்த மசோதா சற்றும் கருத்தில் கொள்ளவில்லை.

நிறுவன அதிபர்கள் எவரும் நிறுவனங்களில் பணியாற்றவில்லை. அவற்றில் ஊழியர்கள்தான் பணி புரிகின்றனர்.

இந்த மசோதா நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. இதேபோன்று கரோனா பரவல் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள அரசு அதை மிகச் சரியாகக் கையாண்டது. இந்திய அரசு அதை சரியாகக் கையாளவில்லை. பொருளாதார நிலையை இந்த அரசு சரியாக மேற்கொள்ளவில்லை.

அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் கரோனா பரவலை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தியுள்ளன. இங்கெல்லாம் உயிரிழப்பு மிக மிகக் குறைவு. ஆனால் இந்திய அரசு அதை உரிய வகையில் கட்டுப்படுத்த தவறிவிட்டது.

சிறிய நாடுகளெல்லாம் கரோனா வைரஸ் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்த போது இந்திய அரசால் அது ஏன் சாத்தியமில்லாமல் போனது. நிறுவனங்களை மீட்டெடுப்பது ஒருபுறம் என்றாலும் ஏற்கெனவே லாபத்தில் இயங்கும் எல்ஐசி, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மிகப் பெரும் லாபத்தில் இயங்கும் எல்ஐசியின் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது.

பெரிய நிறுவனங்களை காப்பதில் தீவிரம் காட்டும் அதே நேரம் வாடகை வாகன ஓட்டுநர், தையல் தொழிலாளர் உள்ளிட்ட சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

கரோனா காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளை இந்த அரசு செய்யப்போகிறது? நிறுவனங்களைக் காக்க கவனம் செலுத்தும் அரசு

தொழிலாளர்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x