Published : 22 Sep 2020 07:46 PM
Last Updated : 22 Sep 2020 07:46 PM

கோவிட்-19 முடக்க காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

கடந்த மார்ச் மாதத்திலிருந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

திருமண வயது மற்றும் தாய்மையின் தொடர்பை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. (I) ஆரோக்கியம், மருத்துவ நலம் மற்றும் தாய் மற்றும் பிறந்த குழந்தை / குழந்தை / குழந்தையின் ஊட்டச்சத்து நிலை, கர்ப்பம், பிறப்பு மற்றும் அதற்கு பிந்தைய நிலை (ii) குழந்தை இறப்பு விகிதம் (ஐ.எம்.ஆர்), தாய்வழி இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்), மொத்த கருவுறுதல் விகிதம் (டி.எஃப்.ஆர்), பிறக்கும் போது பாலியல் விகிதம் (எஸ்.ஆர்.பி), குழந்தை பாலியல் விகிதம் (சி.எஸ்.ஆர்) போன்றவை மற்றும் (iii) உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான இதர புள்ளி விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த குழு ஆய்வு செய்கிறது.

இந்த குழுவின் அறிக்கை அரசிடம் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் படி, கடந்த மார்ச் 1 தேதி முதல் கடந்த 18ம் தேதி வரை, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில், குழந்தை ஆபாசபடங்கள்/பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் தொடர்பாக மொத்தம் 13,244 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் படி, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பாக 420 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

குழந்தைகள் உதவி இந்திய அறக்கட்டளை தகவல் படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் தொடர்பாக 3941 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றங்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவிட்-19 முடக்கம் தொடங்கியதிலிருந்தே, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பற்றி புகார் அளிக்க, தேசிய பெண்கள் ஆணையம் 7217735372 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் பெறப்பட்ட புகார்கள் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த 6 மாதத்தில் பெண்களுக்கு எதிராக 4350 குடும்ப வன்முறை சம்பவ புகார்கள் பெறப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கீழ்கண்ட காப்பீடு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரையிலான, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் சுரக்ஸா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் கிடைக்கும்.

மாற்றியமைக்கப்பட்ட அங்கன்வாடி கார்யகர்த்தி பீமா திட்டம் மூலம 51 வயது முதல் அங்கன்வாடி பணியாளர்கள் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x