Last Updated : 22 Sep, 2020 02:25 PM

 

Published : 22 Sep 2020 02:25 PM
Last Updated : 22 Sep 2020 02:25 PM

வெங்காயம், உருளைக்கிழங்கு அத்தியாவசியப் பொருட்களில் இருந்து நீக்கம்: அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

மாநிலங்களவையில் நிறைவேறிய அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

கடந்த 15-ம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. இதன்பின் இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் பெறப்பட்டுச் சட்டமாகும்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நடைமுறைக்கு வரும். இந்த மசோதாவின் மூலம் தனியார் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சேமிக்கும்போது அரசின் தலையீடு இனி இருக்காது.

இதன்படி, தனியார் முதலீட்டை ஈர்க்கவும், அந்நிய நேரடி முதலீட்டை வேளாண் துறையில் கொண்டு வரவும், சுதந்திரமான உற்பத்தி, சேமித்தல், எங்கும் கொண்டு செல்லுதல், சப்ளை செய்தல் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

மாநிலங்களவையில் விவாதத்தின் போது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் தன்வே ராவ் சாஹேப் தாதாராவ் பேசியதாவது:

“குறிப்பிட்ட அளவுதான் இருப்பு வைக்க வேண்டும் எனும் கட்டுப்பாட்டால், வேளாண் துறைக் கட்டமைப்பில் முதலீட்டுக்குத் தடையாக இருந்தது.

65 ஆண்டுகால சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தால், பேரிடர்கள், பஞ்சம், பஞ்சத்தால் விலை உயர்வு போன்ற தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே பொருட்கள் இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

உணவுப் பதப்படுத்தும் துறையில் இருப்போர், மதிப்புக் கூட்டுப் பிரிவில் இருப்போருக்கு பொருட்கள் இருப்பு வைப்பதில் விலக்கு அளிக்கப்படும். இந்த மசோதாவின் மூலம் வேளாண் துறையில் முதலீட்டைப் பெருக்கி, அதிகமான சேமிப்புக் கிட்டங்கி வசதியை ஏற்படுத்தும். அறுவடை நேரத்தில் ஏற்படும் இழப்பைக் குறைக்கும். இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் சாதகமானது

1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்திருப்பதன் நோக்கமே, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், தொழில்செய்வதை எளிமையாக்க வேண்டும் என்பதுதான்.

நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத நேரத்தில் இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது சூழல் மாறிவிட்டதால் சீர்திருத்தம் தேவைப்பட்டது. இந்தியா பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்தியில் மிதமிஞ்சியதாக இருக்கிறது.

சேமிப்புக் கிட்டங்கிகள், பதப்படுத்தும் ஆலைகள், ஏற்றுமதி வசதிகள் விவசாயிகளுக்கு இல்லை என்பதால், போதுமான நல்ல விலை, விளைபொருட்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் தங்களின் அறுவடை காலத்தில் எளிதில் அழுகும் பொருட்களால் பெரிய இழப்பைச் சந்தித்து வந்தார்கள்”.

இவ்வாறு தன்வே ராவ் சாஹேப் தாதாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x