Published : 22 Sep 2020 12:46 PM
Last Updated : 22 Sep 2020 12:46 PM

ஐ.நா.வின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்

புதுடெல்லி

ஐ.நா. சபை பல பணிகள் செய்து வந்தாலும் அதன் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:

பொது சபையின் தலைவர் வோல்கன் போஸ்கிர் அவர்களே, மேன்மை மிகுந்தவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, வணக்கம்!

எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நிறுவன கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த நல்ல நோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான 'வசுதேவ குடும்பகத்தை' அது பிரதிபலித்தது.

ஐக்கிய நாடுகளின் காரணமாக உலகம் தற்போது ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் கொடியின் கீழ் அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஐநா அமைதி இயக்கங்களில் முன்னணி பங்களிப்பவராக இந்தியா இருந்துள்ளது.

ஆனால், நிறைய சாதிக்கப்பட்ட போதிலும், உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை. மோதல்களைத் தடுப்பதிலும், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், சமநிலையின்மையை குறைப்பதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்தப் பணி இன்னும் செய்யப்பட வேண்டும் என்பதை இன்று நாம் இன்று நிறைவேற்றும் தொலைநோக்கு தீர்மானம் ஒப்புக்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருப்பதை இந்தத் தீர்மானம் ஒப்புக்கொள்கிறது.

காலாவதியான அமைப்புகளின் மூலம் இன்றைய சவால்களை எதிர்த்து நம்மால் போரிட முடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், நம்பிக்கையின்மை சிக்கலை ஐநா எதிர்கொள்ளும். இன்றைய இணைக்கப்பட்ட உலகத்துக்கு, இன்றைய உண்மைகளை பிரதிபலிக்கக்கூடிய; அனைத்து பங்குதாரர்களுக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய; புதிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய; மற்றும் மனிதகுல நலனின் மீது கவனம் செலுத்தக் கூடிய சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை நமக்கு வேண்டும்.

இதை அடைவதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரிய இந்தியா விரும்புகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x