திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3-ம் நாள் பிரம்மோற்சவம்: காலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்பர்

திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் சிம்ம வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இரவில் முத்துப் பல்லக்கு வாகன சேவையும் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 3-ம் நாள் பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இதில், நேற்று காலையில் உற்சவரான மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்து அருள் பாலித்தார். கரோனா பரவல் காரணமாக இம்முறை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 4 மாடவீதிகளில் நடைபெறும் சுவாமி வீதி உலா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், கோயில் வளாகத்திற்குள்ளேயே வாகன சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாலையில் சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. இதில், திருப்பூரில் இருந்து வந்த கலைஞர்கள் உலர்ந்த திராட்சை, பாதாம்,
பிஸ்தா, ஏலக்காய் போன்றவற்றின் மூலம் சுவாமிக்கு விதவிதமான மாலைகளும், கிரீடங்களும்தயார் செய்தனர். மேலும், ரங்கநாயக மண்டபத்தின் உட்புற தளம் முழுவதும் விதவிதமான பழங்களாலும், பூக்களாலும் அலங்கரித்துள்ளனர். இரவு, முத்துப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் காட்சியளித்தார்.

ஆண்டாள் சூடிய மாலை

வழக்கம்போல ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலையும், கிளியும் இன்று திருமலைக்கு வர உள்ளன. நாளை நடக்கும் மோகினி அவதாரம், கருட சேவைக்கு இவை பயன்படுத்தப்படும்.

மேலும், சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் புதிய குடைகளும் இன்று தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in