Published : 22 Sep 2020 08:23 am

Updated : 22 Sep 2020 08:23 am

 

Published : 22 Sep 2020 08:23 AM
Last Updated : 22 Sep 2020 08:23 AM

காங்கிரஸை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்பு பேட்டி

dhinesh-gundurao-interview

கர்நாடக முன்னாள் அமைச்சரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தினேஷ் குண்டுராவ் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்காக மனம் திறந்து பேசினார். அவருடனான சந்திப்பில் இருந்து..

நீண்ட காலத்துக்கு பின் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். எப்படி பணியாற்றப் போகிறீர்கள்?

என் மீது நம்பிக்கை வைத்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் கட்சி பணி செய்ய ஆர்வமாக இருக்கிறேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் தமிழ‌ர்களுக்கும் நான் புதியவன் இல்லை. என்னுடைய சொந்த தொகுதியான காந்தி நகரில் தமிழ் வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக சுக, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். தமிழகத்தில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் திமுக, அதிமுகவினர் எனக்காக ஒற்றுமையாக தொகுதியில் வேலை பார்க்கிறார்கள். என்னுடைய அப்பா குண்டுராவ் முதல்வராக இருந்தபோது தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தார். அப்பா எம்ஜிஆரை அண்ணன் என்றே அன்போடு அழைப்பார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர் அவர். அதை வெளிப்படையாகவே பெருமையாக அப்பா சொல்லிக் கொள்வார். பெங்களூரு வரும்போதெல்லாம் எம்ஜிஆர் எங்கள் வீட்டுக்கு வருவார். காங்கிரஸில் இருந்த சிவாஜி கணேசன் குடும்பத்துடன் அப்பாவுக்கு நெருக்கமான உறவு இருந்தது. அதனால் தமிழர்களோடு பணியாற்றுவது எளிதாகவே இருக்கும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பங்கீடு போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

பெங்களூரு, கோலார் தங்கவயல் என கர்நாடகா முழுவதும் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். அதேபோல தமிழகத்திலும் ஏராளமான கன்னடர்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். கன்னடர்களும் தமிழர்களும் ஒருதாய் மக்கள்.எனவே இரு தரப்பினரிடையே சகோதரஉணர்வையும் அன்பையும் வளர்க்க வேண்டும். காவிரி போன்ற விவகாரங்களை வெறுமனே உணர்வு எழுச்சியோடு அணுகாமல், கள யதார்த்தத்தின் அடிப்படையில் நிதானமாக‌ அணுகி சுமூகமாக பேசித் தீர்க்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே உங்களை நியமித்திருப்பதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஏதேனும் குறிப்பான அறிவுரை கூறினார்களா?

தமிழ்நாட்டுக்கும் காங்கிரஸூக்கும் மிக நீண்ட கால உறவு இருக்கிறது. காமராஜரில் தொடங்கி மிகச் சிறந்த தலைவர்களை காங்கிரஸுக்கும் நாட்டுக்கும் தமிழ்நாடு வழங்கி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று நீண்ட காலம் ஆனாலும், மேலிடத் தலைவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது மிகுந்த அன்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டின் மீது தனிப்பட்ட அக்கறை இருக்கிறது. ‘‘அண்டை மாநிலத்தை சேர்ந்த உங்களை நியமித்ததே அடிக்கடி தமிழ்நாட்டுக்கு சென்று கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்’’ என ராகுல் கூறினார். இளைஞர்களையும், மூத்தவர்களையும் அனுசரித்து அடிமட்ட அளவிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என மேலிடத் தலைவர்கள் அறிவுரை கூறினார்கள்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக களமிறக்கப் போகிறீர்கள்?

வசந்த குமாரின் மறைவு கன்னியாகுமரி தொகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அங்குள்ள மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. தொகுதியில் மக்களின் கருத்தையும், கட்சி நிர்வாகிகளின் முடிவையும் கேட்டறிந்த பிறகே வேட்பாளரை முடிவு செய்வோம்.

வரும் பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு எத்தனை இடங்களை கேட்கப் போகிறீர்கள்?

நான் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், தலைவர்களை சந்திக்காமல், இவ்வளவு சீக்கிரம் இந்த கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பலமான கட்சியாக இருக்கிறது. அவர் தலைமையிலான திமுக கூட்டணியில் காங்கிரஸ் வரும் தேர்தலை சந்திக்கும். தேர்தல் காலத்தில் இரு தரப்பும் பேசி பரஸ்பர புரிதலோடு, மதிக்கத்தக்க எண்ணிக்கையில் தொகுதி களை பெறுவோம்.

திமுக ஆட்சி அமைந்தால் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் தீர்மானம் போட்டுள்ளனர்.இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை. அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய நிர்வாகிகளிடம் மூத்த தலைவர்கள் பேசி இருக்கிறார்கள். நானும் சிலரிடம் பேசினேன். மத்தியில் பாஜகவின் மோசமான ஆட்சியை பார்த்ததமிழர்கள் காங்கிரஸின் ஆட்சியை விரும்புவதாக கூறினார்கள். ஆட்சியில் பங்கேற்பதை பற்றியெல்லாம் கட்சி மேலிடம் தான்முடிவெடுக்கும். ஆனால் ஒன்றை மட்டும்நான் உறுதியாக சொல்கிறேன். காங்கிர‌ஸை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவேன்.


காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்காங்கிரஸ்தினேஷ் குண்டுராவ் சிறப்பு பேட்டிDhinesh gundurao interview

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author