Last Updated : 22 Sep, 2020 06:58 AM

 

Published : 22 Sep 2020 06:58 AM
Last Updated : 22 Sep 2020 06:58 AM

சலுகை வழங்கப்படுவதில் சிக்கல்; சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை: தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் கருத்து

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டன‌ர்.

இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “சிறைத் துறையின் விதிமுறையில் வழங்கப்பட்ட அரசு விடுமுறை நாட்களை கழித்தால், சசிகலா வரும் அக்டோபர் மாதத்துக்குள் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது. ரூ.10 கோடி அபராதத்தை செலுத்துவதற்கான வேலைகளையும் செய்து வருகிறோம்” என கூறியிருந்தார்.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூரு சிறைத் துறை நிர்வாகத்திடம், ‘‘எந்தெந்த சிறை விதிமுறைகளின்படி கைதிகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள்? சசிகலாவுக்கு எந்தெந்த விதிமுறைகள் பொருந்தும்’’ என்று நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

எனது கேள்விகளுக்கு இன்னும் 30 நாட்களுக்குள் சிறைத் துறை பதில் அளிக்கும். அதற்கு முன்னதாக கைதிகள் விடுதலை செய்யும் முறை தொடர்பான கர்நாடக சிறைத் துறை விதிமுறைகள் குறித்த சில அரசாணைகள் எனக்கு கிடைத்துள்ளன.

அதில், சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகம், சலுகைகள் வழங்கப்பட தகுதியான கைதிகளை தேர்வு செய்து சிறைத் துறை டிஜிபி மற்றும் ஐஜி பார்வைக்கு அனுப்பும். அவர்கள் கைதியின் நன்னடத்தை உள்ளிட்ட விவகாரங்களை ஆராய்ந்த பின் அடுத்தக்கட்ட ஒப்புதலுக்காக கைதி விடுவிக்கும் ஆய்வு குழுவுக்கு அனுப்புவார்கள்.

இந்தக் குழுவில் கர்நாடக உள்துறை செயலர், சட்டத் துறை செயலர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, குற்றப்பிரிவு ஏடிஜிபி, அரசு வழக்கறிஞர், சிறைத் துறை டிஜிபி ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்தக் குழு கைதியின் வழக்குத் தன்மை, சிறை நடத்தை ஆகியவற்றை ஆராய்ந்த பின் முடிவெடுப்பார்கள்.

ஆனால், சசிகலா மீது சிறையில் இருந்து வெளியே சென்றது, சொகுசு வசதிகளை அனுபவித்தது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது போன்ற புகார்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் அளித்த அறிக்கையின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் புகார் அளித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா உள்துறை செயலராக பொறுப்பேற்று இருக்கிறார். எனவே அவர் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்குவதை எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறைத் துறை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான சலுகைகளை பெரும்பாலும் வழங்கியதில்லை. எனவே சசிகலாவுக்கு சிறைத் துறையின் சலுகைகளை வழங்குவதில் சிக்கல் இருப்பதால் அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை.

இவ்வாறு நரசிம்ம மூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x