கடையடைப்பால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடையடைப்பால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated on
1 min read

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கோரி, காஷ்மீரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

வணிகர்கள், தொழில் துறையினர், போக்குவரத்து வாகனங்களை இயக்குவோர் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனால் காஷ்மீரில் நேற்று பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் வர்த்தகப் பகுதிகள், மக்கள் வசிக்கும் இடங்கள் என கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளத்தில் மிதந்தன.

இந்நிலையில் ஓராண்டு முடிந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் காஷ்மீர் அரசு தவறிவிட்டதாகக் கூறி நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது.

பிரிவினைவாத தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் சையது அலி கிலானி, யாசின் மாலிக், மிர்வைஸ் உமர் பரூக் உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் நகரில் பேரணி, போராட்டத்தை தடுக்கும் வகையில் வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். எனினும் ஸ்ரீநகரில் நேற்று அதிகாரப்பூர்வ தடை ஏதும் விதிக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in