Last Updated : 16 Sep, 2015 09:19 PM

 

Published : 16 Sep 2015 09:19 PM
Last Updated : 16 Sep 2015 09:19 PM

வானொலியில் மோடி பேசுவதற்கு தடை கேட்கும் காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் மறுப்பு

பிஹார் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு தடை கோரப் போவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஆனால், அதுபோல் எந்த தடையும் விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், வானொலியில் மாதந்தோறும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மனதில் இருந்து (மன் கி பாத்) என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பொதுமக்கள் கூறும் பல யோசனைகள் குறித்து மோடி பேசி வருகிறார். இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளதால், வானொலியில் மோடி பேசினால், அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரைநிகழ்த்த உள்ளார் மோடி. இந்நிலையில், மோடி உரைக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாகளர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசுக்கு சொந்தமான வானொலியை அரசியல் காரணங்களுக்காகப் பிரதமர் மோடி பயன்படுத்துவதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். வானொலியில் உரை நிகழ்த்துவதை மோடி தவிர்க்க வேண்டும்” என்றார். ஆனால், அப்படி எதுவும் தடை விதிக்க முடியாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலின்போது கூட இதேபோன்ற புகாரை காங்கிரஸ் கூறியது. அப்போது, பிரதமர் மோடியின் உரையை (பதிவு செய்யப்பட்ட டேப் மூலம்) நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில், தேர்தல் நடத்தை விதியை மீறியோ அல்லது ஆட்சேபணைக்குரிய வகையிலோ மோடி எதுவும் பேசியிருக்கவில்லை’’ என்றன.

எனினும், “அரசியல் கட்சியினர் புகார் அளித்தால், மோடியின் வானொலி உரையை முழுமையாக ஆய்வு செய்வோம். அதில் ஏதேனும் ஆட்சேபணைக்குரிய வகையில் இருந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்று ஆணைய வட்டாரங்கள் கூறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x