

வியாபம் ஊழல் தொடர்பாக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் 40 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொழில்கல்வி சேர்க்கை மற்றும் அரசு நியமனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை தொழில் கல்வி வாரியம் (வியாபம்) நடத்தி வருகிறது.
ஆசிரியர்கள், வனத் துறை, மருத்துவ துறை அதிகாரிகள் நியமனத்துக்காக கோடிக் கணக்கான ரூபாய்க்கு ஊழல் நடந்ததும், திறமையற்றவர்கள் பணி நியமனம் மற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ம.பி. முன்னாள் ஆளுநர் ராம்நரேஷ் யாதவ், அவரது மகன் சைலேஷ் யாதவ், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், கல்வி நிறுவனங் கள் உட்பட பலர் சம்பந்தப் பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் வழக்கில் சம்பந்தப் பட்ட 45-க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தது நாட்டையே அதிர்ச் சிக்கு உள்ளாக்கியது.
இந்த ஊழலுக்கு பொறுப் பேற்று ம.பி. முதல்வர் சவுகான் பதவி விலக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்றத்திலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், வியாபம் ஊழல் வழக்கை மாநில அரசு விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள 40 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ராம்நரேஷ் யாதவின் முன்னாள் அந்தரங்க செயலாளர் தன்ராஜ் யாதவ் மற்றும் வியாபம் ஊழலில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ஜகதீஷ் சாகர் ஆகியோரின் லக்னோவில் உள்ள வீடுகளிலும் சோதனை நடந்தது.
அத்துடன் முன்னாள் ம.பி. அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரத் மிஸ்ரா, வினோத் பண்டாரி, சுதீர் சர்மா, ஓம் பிரகாஷ் சர்மா, நிதின் மகிந்திரா உட்பட பலருடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
தவிர ம.பி. வியாபம் அலு வலகத்திலும் சோதனை நடத்தப் பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ இதுவரை 105 வழக்குகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.