

நாட்டில் கரோனா வைரஸ் பரவலுக்குச் சில நேரங்களில் கடவுள் மீது பழிசுமத்துகிறார்கள். சில நேரங்களில் மக்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ஒருபோதும் தங்களின் தவறான நிர்வாகத்தைக் குறிப்பிடுவதில்லை என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்து மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் பேசுகையில், “மக்களின் பொறுப்பற்ற நடத்தையால்தான் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது” என்று மக்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “மோடி அரசாங்கம், கரோனா வைரஸ் பரவலுக்கும், நாட்டில் ஏற்பட்ட அவலநிலைக்கும் சில நேரங்களில் கடவுள் மீது பழிபோடுகிறது. சில நேரங்களில் மக்கள் மீது குற்றம் சாட்டுகிறது. ஆனால், தன்னுடைய சொந்த நிர்வாகத்தையும், ஆட்சியையும், தவறான கொள்கைகளையும் காரணமாகக் குறிப்பிடுவதில்லை. இன்னும் மோடியின் எத்தனை செயல்களை இந்த தேசம் தாங்கும்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி விமர்சித்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் விமர்சனங்கள் அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக அதிரித்துள்ளது. ஆனால், இதில் ஆறுதல் தரும் விதத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை நெருங்குகிறது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,130 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.