2017, 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 1,200 பேர் கைது; 563 பேர் காவலில் உள்ளனர்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய  உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி : கோப்புப் படம்.
மத்திய  உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி : கோப்புப் படம்.
Updated on
1 min read

கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் நாட்டில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 563 பேர் இன்னும் காவலில் இருக்கின்றனர் என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக இன்றுபதில் அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நாட்டில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் 563 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2017-ம் ஆண்டில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமானோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும், மிகக் கடுமையான என்எஸ்ஏ சட்டத்தில் 501 பேர் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். இதில் 229 பேர் விடுவிக்கப்பட்டனர், 272 பேர் காவலில் இருக்கிறார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டில் 697 பேர் என்எஸ்ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் 406 பேரை மேல்முறையீட்டு வாரியம் விடுவித்தது. 291 பேர் காவலில் இருக்கின்றனர்.

2017, 2018 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் என்எஸ்ஏ சட்டத்தில் 795 பேர் கைது செய்யப்பட்டனர். 466 பேர் விடுவிக்கப்பட்டனர், 329 பேர் காவலில் இருக்கின்றனர். உ.பி.யில் கடந்த 2017, 2018-ல் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 150 பேர் விடுவிக்கப்பட்டனர். 188 பேர் காவலில் இருக்கின்றனர்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in