

இந்தியாவில் கரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றதே காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தப்லீக் ஜமாத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
அதில், “கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.
டெல்லி அரசு கரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி,பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.
கரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணமாகும்” எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் தற்கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த அறிக்கையின்படி பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள் தற்கொலை, வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை, பிற தொழில் செய்வோர் தற்கொலைகள் குறித்து போதுமான தகவல்களை அளிக்கவில்லை.
இதன் காரணமாகவே விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும், வேளாண் துறையில் நடந்த தற்கொலைகள் குறித்தும் தனியாக எந்த விவரங்களையும் வெளியிட முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
என்சிஆர்பி வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 2019-ம் ஆண்டில் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த 2018-ம் ஆண்டில் 10,357 ஆக இருந்தது. நாட்டில் நடந்த தற்கொலையில் 7.4 சதவீதம் விவசாயிகள் தற்கொலையாகும். 5,947 விவசாயிகள், 4,324 வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.