Published : 21 Sep 2020 08:40 AM
Last Updated : 21 Sep 2020 08:40 AM

எல்லையில் மோதலுக்கு ஒரு மாதம் முன்பே 5 இடங்களில் இந்தியா ரோந்து செல்வதை தடுத்த சீனா

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதை தடுக்க இந்திய வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப் படையும் தயார் நிலையில் உள்ளது. எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு மணாலி - லே நெடுஞ்சாலையில் விரையும் ராணுவ வாகனங்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி

எல்லையில் சீனாவுடன் கடந்த மே மாதம் மோதல் தொடங்கினாலும் அதற்கு ஒரு மாதம் முன்பே 5 இடங்களுக்கு இந்திய வீரர்கள் ரோந்து செல்வது தடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை கூறும்போது, “லடாக்கில் நமது ரோந்து முறைகள் பாரம்பரியமானவை. நன்கு வரையறுக்கப்பட்டவை. உலகின் எந்த சக்தியாலும் நாம் அங்கு ரோந்து செல்வதை தடுக்க முடியாது” என்றார்.

ஆனால், கள நிலவரம், குறிப்பாக லடாக்கின் வடக்கே உள்ள தேஸ்பாங் சமவெளியில் வேறாக உள்ளது. இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த மே மாதம் மோதல் தொடங்கினாலும் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் பிங்கர் 4 பகுதியில் இருந்து பிங்கர் 8 பகுதியில் உள்ள எல்ஏசி (கட்டுப்பாடு எல்லைக் கோடு) முனைக்கு இந்திய வீரர்கள் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரோந்து முனைகளான 10, 11, 11ஏ, 12 மற்றும் 13-க்கு
இந்திய வீரர்கள் செல்வதை தடுக்கும் வகையில் சீனப் படையினர் கடந்த மார்ச் - ஏப்ரலில் பாதுகாப்பு அரண் அமைத்து
விட்டனர்” என்றார்.

முக்கியத்துவம் வாய்ந்த சப்-செக்டார் வடக்கு சாலை அல்லது தர்புக்-ஷையாக்-தவுலத் பெக் ஓல்டி சாலைக்கு கிழக்கே உள்ள இந்த 5 முனைகளும் எல்ஏசி.க்கு அருகில் அமைந்துள்ளன. இதன் மூலம் எவ்வளவு பரப்பரளவு நிலத்துக்கு இந்திய வீரர்கள் ரோந்து செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை. எனினும் சுமார் 50 சதுர கி.மீ. பகுதிக்கு இந்திய வீரர்கள் ரோந்து செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக சீன எல்லை விவகாரத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பின் (சீனா ஸ்டடி குரூப்) முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேற்கூறிய இடங்களுக்கு இந்திய வீரர்கள் செல்ல முடியாததன் மூலம் அந்தப் பகுதிகள் சீன வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாகவே கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் விரும்பினால் இப்போதும் கூட அங்கு செல்ல முடியும். ஆனால் அது மற்றொரு மோதலை ஏற்படுத்துவதாக அமையும் என கூறப்படுகிறது.

இப்பகுதியில் பணியாற்றிய முன்னாள் ராணுவ கமாண்டர் ஒருவர் கூறும்போது, ‘‘ஒய் ஜங்ஷன் எனப்படும் இந்தியப் பகுதிக்கு மிக நெருக்கமாக ஊடுருவி தொடர் கண்காணிப்பு இல்லாமல் சீன வீரர்கள் தடுப்பு அரண் அமைத்திருக்க வாய்ப்பில்லை. தேஸ்பாங் சமவெளி நமது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது லடாக்கின் பாதுகாப்புக்கு முக்கியமானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x