

வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இவை மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
வேளாண்மையை பெரிதும் சார்ந்துள்ள மாநிலங்களில் இந்தமசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள்பல்வேறு கட்ட போராட்டங்களைதிட்டமிட்டு வருகின்றனர். ஹரியாணா விவசாயிகள் நேற்று நெடுஞ் சாலைகளில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையொட்டி மாநிலத்தின் பல இடங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் விவசாயிகள் சாலைகளில் திரண்டு மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இருசக்கரவாகனங்கள் மற்றும் டிராக்டர்களை சாலைகளின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக விவசாயிகளின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஹரியாணா அரசு செய்திருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தும் சில இடங்களில் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்.