

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஓராண்டுக்குள்ளாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அச்சமடைந்துள்ள பல முக்கிய தீவிரவாதிகள், தற்போது தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது, ஏராளமான பதுங்குக்குழிகள் அமைக்கப்பட்டிருப்பதை ராணுவத்தினர் கண்டறிந்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த பதுங்குக்குழிகளை அதிக அளவில் தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். குறிப்பாக, சோபியான் மாவட்டத்தில் இவை அதிகம் இருப்பதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பதுங்குக்குழிகளை கண்டறிந்து அவற்றை சமன்படுத்தும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.