குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை ஒத்திவைத்தப் பின்பும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்குள் தர்ணா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்ட காட்சி : படம் ஏஎன்ஐ
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்ட காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read


வேளாண் துறை தொடர்பான இரு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டு, அவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அவைக்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.கள் மாநிலங்களவையின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய 2மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று அறிமுகம் செய்தார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய காட்சி
நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய காட்சி

அதைத் தொடர்ந்து நடந்த விவாத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர். இந்த மசோதாக்கள் விவாசயிகளுக்கு எதிாரானது, குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்யக்கூடியது எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

மேலும், அந்த மசோதாக்களை நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். ஆனால், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவையில் பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

மேலும், பிற்பகல் 3 மணிக்குபின் அவையில் கிருமி நாசினி தெளிக்கப்பட இருப்பதால் நாளைவரை அவையை ஒத்திவைப்பதாக துணைத்தலைவர் அறிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.கள் பிற்பகல் 3 மணிவரை மாநிலங்களவைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு மசோதாக்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டதால், இனி இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் கையொப்பமிட்டவுடன் நடைமுறையில் இருக்கும் அவசரச் சட்டங்களுக்குப் பதிலாக இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in