Last Updated : 20 Sep, 2020 02:51 PM

 

Published : 20 Sep 2020 02:51 PM
Last Updated : 20 Sep 2020 02:51 PM

விவசாயம் சார்ந்த நாட்டை கார்ப்பரேட் சார்பு நாடாக மாற்றிவிட்டீர்கள்: மாநிலங்களவையில் வேளாண் மசோதா மீது எதிர்க்கட்சிகள்  காரசார வாதம்

விவசாயம் சார்ந்த நாட்டை கார்ப்பரேட் சார்பு நாடாக மாற்றிவிட்டீர்கள் என்று மாநிலங்களவையில் வேளாண் மசோதா தொடர்பாக இன்று நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை மத்திய அரசு மீது வைத்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. வி. விஜய்சாய் ரெட்டி பேசுகையில் “ காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை எதிர்த்து போலித்தனம் செய்கிறது. இடைத் தரகர்களை ஊக்குவிக்கவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதேபோன்ற போலி்த்தனத்தைத்தான் தேர்தல் வாக்குறுதியிலும் அளித்தது.
இந்த மசோதா விவசாயிகளுக்கு உதவுகிறது, அவர்களின் விளை பொருட்களை எளிதாக விற்பனை செய்யவும், இடைத்தரகரகள் இல்லாமல் செயல்படவும் முடியும்” எனத் தெரிவித்தார்.
அப்போது விஜய்சாய் ரெட்டி காங்கிரஸ் கட்சி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ்

அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா, “ அவையில் உறுப்பினர்களுக்கு தனி ஒழுக்கவிதிகள் இருக்கின்றன. அந்த பாரம்பரியப்படி நடக்க வேண்டும். இப்போது பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அவைத்தலைவர் இருக்கையில் அப்போது ஹனுமந்தய்யா அமர்ந்திருந்தார். அவர் பேசுகையில் “ ரெட்டி பேசியதில் ஏதேனும் ஆட்சபனைக்குரியது இருந்தால் நீக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசுகையில் “ எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் செய்யப்போவதில்லை என்பது பாஜக உறுதி செய்கிறது, குற்றவாளியாக நிற்கப்போகிறது. ஒரு விவசாயின் மகன் இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்வதை நம்புவது கடினமாக இருக்கிறது.

காங்.எம்.பி.ஆனந்த் சர்மா

சில நிர்பந்தங்கள் காரணமாக இந்த மசோதாவை ஆளும் கட்சி எந்த மசோதாவையும் விவாதிக்க மறுக்கிறது. விவாதங்கள் இன்று மசோதாவை நிறைவேற்ற துடிக்கிறது. இந்த அவசரச்சட்டங்களை கரானா காலத்தில் கொண்டு வரும் ஏன் யாருடனும் கலந்தாய்வு செய்யவில்லை. பாரதிய மஸ்தூர் சங்கத்திடம் கூட மத்திய அரசு ஆலோசித்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

டிஆர்எஸ் கட்சியின் எம்.பி. கே.கேசவராவ் பேசுகையில் “ வேளாண் துறையை புதிய காலத்துக்கு எடுத்துச் செல்லும் இந்த மசோதா என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறுகிறார். ஆனால் வேளாண்துறைக்கே எதிராக மசோதா இருக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் மசோதா மாற்றும் என்று கூறுகிறார் ஆனால், விவசாயம் சார்ந்த நாட்டை கார்ப்பரேட் சார்பு நாடாக மத்திய அரசு மாற்றிவிட்டது.

இந்த மசோதாவின் மூலம் வாங்குவோருக்கு எதிராக விவசாயிகள் தங்கள் உரிமையைக் கூட கேட்க முடியாது. தங்கமுட்டை போடும் வாத்தை கொல்ல நினைக்கிறது மத்திய அரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநில உரிமைகள் மீதான தாக்குதல் இந்த மசோதாவாகும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x