Last Updated : 20 Sep, 2020 02:06 PM

 

Published : 20 Sep 2020 02:06 PM
Last Updated : 20 Sep 2020 02:06 PM

விவசாயிகளுக்கு டெத் வாரண்ட் பிறப்பிப்பதில் கையொப்பமிடமாட்டோம்: மாநிலங்களவையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி,


நாட்டின் விவசாயிகளுக்கு டெத் வாரண்ட் பிறப்பிப்பதில் நாங்கள் கையொப்பமிடமாட்டோம் என்று வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் மாநிலங்களவையிலும் காரசார விவாதம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி கே.கே.ராகேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன், திமுக எம்.பி. திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி. கே.சி வேணுகோபால், வேளாண் மசோதாக்களில் 2 மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

விவாதம் தொடங்கியபின், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில் “ மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா தீய நோக்கத்துடன் தவறான நேரத்தில்

கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாங்கள் முழுையாக எதிர்க்கிறோம். இந்த மசோதா நாடுமுழுவதும் உள்ள நில உரிமையாளர்களுக்கு எதிரானது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்துக்கு எதிரானது.

விவசாயிகளுக்கு டெத்வாரண்ட் பிறப்பிப்பதில் நாங்கள் கையொப்பமிட்டமாட்டோம்.வேளாண்மை என்பது மாநிலங்களுக்கு உட்பட்ட பட்டியலில் இருக்கிறது. இந்த மசோதா கூட்டாட்சி கூட்டுறவுக்கு எதிரானது. ஏபிஎம்சி சட்டம், குறைந்தபட்ச ஆதார விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்ய அனுமதிக்கமாட்டோம். கரோனா நாடுமுழுவதும் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்த மசோதாவைக் கொண்டுவர வேண்டிய தேவை என்ன.

இந்த மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். அப்படியயென்றால் யாருக்காக இந்த மசோதாவை மத்தியஅரசு கொண்டு வருகிறது.

பாஜக கூட்டணியில் இருக்கும் அகாலிதளம் கட்சிகூட இந்த மசோதாவை எதிர்த்து, மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துவிட்டார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் மசோதா இருக்கிறது.

இந்த அரசின் உண்மையான முகம் மெல்ல வெளியே வரும். அம்பானி, அதானி போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை வேளாண் சந்தைக்குள் அனுப்புகிறீர்கள். இந்த இரு மசோதாக்களும் பஞ்சாப் மாநில பொருளாதார நலனுக்கு எதிரானது.இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய காரணமாக இருந்த பஞ்சாப் மாநலத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்

பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ்

பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசுகையில் “ விவசாயிகளை தவறாக வழிநடத்தி, இந்த மசோதாவில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் கட்சி. நாடு போதுமான அளவு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தபின்பும், விவசாயிகளின் வருமானம் கடந்த 70 ஆண்டுகளாக ஏன் உயரவில்லை. நாட்டில் வேளாண் புரட்சி ஏற்பட இந்த இரு மசோதாக்களும் துணை புரியும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விஷயத்தில் நாங்கள் நீதி வழங்குவோம்.

இந்தியாவில் உணவுப் பதப்படுத்தும் தொழில் மெதுவாக வளர்கிறது. இந்த மசோதா மூலம் உணவுப்பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வேளாண் பொருள் ஏற்றுமதி சிறப்பாக வளரும். விவசாயிகளுக்கு சாதகமான இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் அநீதி இழைக்கிறது.
இந்த தேசமும், விவசாயிகளும் காங்கிரஸ் கட்சியின் அரசியலைப் புரிந்து கொண்டுவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன்

திரணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன் பேசுகையில் “ இந்த மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்க வேண்டும். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட வேண்டும். உங்களிடம் போதுமான எண்ணிக்கையில் எம்.பி. இருக்கிறார்கள் என்பதால் செயல்படுகிறீர்கள்.

எங்களுக்கு இருக்கும் உரிமையின் படி நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி செயல்படுங்கள் என்று கூறுகிறோம். நாம் பின்பற்றுவது மோசமான நடைமுறை. தேர்வுக்குழு என்பது கையை முறிக்கும் குழு அல்ல. பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளது, இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த மசோதா குறித்து மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை எனும்போது, மத்திய அரசின் உயர்ந்த வாக்குறுதிகளும், நம்பிக்கத்தன்மையும் கேள்விக்குள்ளாகுகிறது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x