மாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு
Updated on
1 min read

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசினர்.

இந்தநிலையில் அவை நடந்து கொண்டிருந்தபோது திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன் திடீரென எழுந்து அவைத் தலைவரின் இருக்கை பகுதிக்கு சென்றார். மேலும் விவசாய மசோதாக்களின் பிரதிகளை அவைத் தலைவரின் முன்பு நீட்டி காட்டினார். அவரை முன்னேறி வர வேண்டாம் என அவைத் தலைவர் கூறினார். அப்போது அவரது உதவியாளரும் தடுத்து நிறுத்த முற்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in