Last Updated : 20 Sep, 2020 11:53 AM

 

Published : 20 Sep 2020 11:53 AM
Last Updated : 20 Sep 2020 11:53 AM

கரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுகிறது: மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு

கரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுவதாக மக்களவையில் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். இதன் மீது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டின் எம்.பியான சு.வெங்கடேசன் நேற்று எழுப்பியிருந்த கேள்விக்கானப் பதிலில் அவர் இதை குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்த தனது எழுத்துபூர்வ பதிலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஷர்ஷவர்தன் கூறும்போது, ‘சுமார் 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடிநீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டுள்ளன.

அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, நான்கு வகையான முதல் கட்ட அடிப்படை ஆய்வுகள் மூலம் சித்த மருந்தான கபசுரக் குடிநீர் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், கோவிட் நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்து அறிந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல சித்த மருந்துகளைக் கொண்டு கோவிட்19 நோயை கையாண்டு வருவதை மத்திய அரசு நன்கு அறியும். மத்திய ஆயுஷ் துறையானது, சித்த மருத்துவர்களுக்கு கோவிட் நோய்க்கான சித்த மருத்துவ வழிகாட்டுதல் அளித்தும், சித்த மருந்துகளின் மீது ஆய்வுகள் நடத்த அனைத்து ஊக்குவிப்பும் செய்தும் வருகின்றது.

மத்திய சித்த ஆராய்ச்சி நிலையமும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முழுவீச்சில் பலகட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. EMR வழியாக பிற ஆய்வு நிறுவனங்கள் கோவிட் 19 நோயில் சித்த மருந்துகளில் ஆராய்ச்சி செய்யவும் பரிந்துரைகள் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளன.’ எனத் தெரிவித்தார்.

மதுரை தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் தனது கேள்வியில், ‘கரோனா சிகிச்சையில் மத்திய ஆயுஷ் துறை எடுக்கும் ஆய்வு நடவடிக்கைகள் என்ன?

பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருந்துகள், கரோனாவை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்கும் மற்றும் அலோபதி-ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சைகளின் மேலாய்வின் நிலை என்ன?’ என கேட்டிருந்தார்.

இதற்கும் பதில் தரும் வகையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனின் பதிலில் இணைக்கப்பட்ட முழு விபரங்களின்படி, தமிழகத்தில் மட்டும் 29 சித்த மருத்துவ கோவிட் கேர் சென்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், இதுவரை 16,563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கோவிட் நோயில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளனர். ஏறத்தாழ 120 மெட்ரிக் டன் அளவிலான கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநயோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 23 இலட்சத்து 37 ஆயிரத்து 395 பேருக்கு கபசுரக் குடிநீரும் ஒரு கோடியே 32 இலட்சத்து 53 ஆயிரத்து 115 பேருக்கு நிலவேம்புக்குடி நீரும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழுவீச்சில் இயங்கி வருகின்றன.

ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம், முதலான மருந்துகள் கோவிட் 19 நோயில் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இம்மருந்துகள் மீது பல "கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள்", அதாவது நோயாளிகளிடமும் - நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x