Published : 20 Sep 2020 08:50 AM
Last Updated : 20 Sep 2020 08:50 AM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமல்லாமல் அனைத்து ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்து. இது படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்றுத் தெரிவித்தார்
2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்துவது குறித்து மத்தியஅரசு ஏதும் முடிவு செய்துள்ளதா என்பது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக பதில் அளித்ததாவது:
மக்களின் பணப்பரிவரித்தனையை கருத்தில் கொண்டு, புழக்கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதா என்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து, மத்திய அரசுதான் முடிவு செய்யும்.
அந்த வகையில் கடந்த 2019-20, 2020-21ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க நிறுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதேசமயம். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்துவது குறித்தும் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
கடந்த மார்ச் 31-ம் தேதி வரை நாட்டில் 27,398 லட்சம் எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், கடந்த 2019, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 32,910 லட்சம் எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. கடந்த ஓர் ஆண்டில் 5 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகள் புழக்கத்தில் குறைந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்பட்ட ரூபாய் அச்சடிக்கும் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பும் நிறுத்தப்பட்டது. படிப்படியாக அனைத்து ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கும் பணியும் மத்தியஅரசின் வழிகாட்டுதலி்ன் படி தொடங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பாரதிய ரிசர்வ் வங்கியின் முத்ரன் பிரைவேட் லிமிட் அச்சடிப்பு நிறுவனம் கடந்த மார்ச் 23 முதல் மே 3-ம் தேதிவரை பணிகளை நிறுத்தியது. மே 4-ம் தேதி முதல் படிப்படியாக பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதில் செக்யூரிட்டி பிரின்டிங் அன்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட் நிறுவனமும் கரோனா பரவல் காரணமாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியை நிறுத்தியது. இதேபோல நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அலுவலகமும் கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ரூபாய் நோட்டுகள்ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டு இருப்பில் இருந்தவை அனைத்தும் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகள் ரயில்கள் மூலம் பல்வேறு மாநில ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!