Published : 20 Sep 2020 07:43 AM
Last Updated : 20 Sep 2020 07:43 AM

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பிற மதத்தினர் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை: தேவஸ்தான அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், தெலுங்குதேசம் கடும் எதிர்ப்பு

திருமலை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இந்து அல்லாத வேற்று மதத்தினர், மத பதிவு புத்தகத்தில் கையெழுத்திடத் தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் இந்து அல்லாத வேற்று மதத்தவர்கள் அங்குள்ள மத பதிவேட்டில் தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கையும் கவுரவமும் உள்ளது என கையெழுத்திட்ட பின்னரே சுவாமியை தரிசிக்க செல்வது வழக்கம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சோனியா காந்தி உள்ளிட்ட பலர் இந்த பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை தரிசித்தனர்.

இந்நிலையில், வேற்று மதத்தைச் சேர்ந்தவரான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் ஏன் கையெழுத்து பெறப்படவில்லை என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குபதிலளிக்கும் வகையில், திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இனி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மத பதிவேட்டில் கையெழுத்திடத் தேவையில்லை. ஏழுமலையான் மீது நம்பிக்கை இருந்தால் போதுமானது’’ என்றார்.

முதல்வர் ஜெகன்மோகனுக்காக..

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறவுள்ள வரும் 23-ம் தேதி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பிக்க உள்ளார். இதற்குள் மத பதிவேட்டு முறையை முற்றிலும் ரத்து செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது என தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்து அமைப்பினரும் தேவஸ்தானம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் செயல் இது. கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்படும்படியான இந்த செயலால் நாட்டுக்கு கெடுதல் விளையும். இது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆன்மிக துரோகம் ஆகும். ஏழுமலையானை நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். அது வேற்று மதத்தவராக இருப்பினும் அதுதான் நல்லது. இதற்காகத்தான் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த மத பதிவேட்டு முறையை நீக்கி, நம்பிக்கை இருப்பவர்கள் கோயிலுக்குள் செல்லலாம் என்றால் யார் யாருக்கு நம்பிக்கை இருக்கிறது என இவர்களுக்கு எப்படி தெரியும்? என கண்டித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x