

லடாக் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்தும் அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு விரிவான ஆய்வு செய்தது.
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 5 முறை ராணுவ அதிகாரிகள் அளவில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
எல்லையில் இந்திய வீரர்களின் மன உறுதியை குலைக்கும் தந்திரத்திலும் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்காக, அரசியல் தலைவர்களுக்காக உயர்ந்த மலையில் ஏன் இருக்கிறீர்கள் என்று ஒலிபெருக்கியில் பிரச்சாரம் போல் கூறுகின்றனர். ஆனால், இந்திய வீரர்கள் மிக உயர்ந்த மலைப் பகுதிகளில் பனி சூழ்ந்த நிலையிலும் தீரத்துடன் சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், லடாக்கின் கிழக்கு பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை விரிவான ஆய்வு மேற்கொண்டது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தலைமை தளபதிகள் கலந்து கொண்டனர். 90 நிமிடம் நடந்த இந்தக் கூட்டத்தில் லடாக் எல்லையில் கண்காணிப்பு , பாதுகாப்பை அதிகரித்தல், அருணாசல பிரதேசம், சிக்கிம் பிரிவுகள் உட்பட 3,500 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் போக்கு குறித்தும் சீனாவின் அத்துமீறல்களை திறம்பட எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே விரிவாகக் கூறினார்.
மேலும், ராணுவ அதிகாரிகள் அளவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது கடந்த 10-ம் தேதி மாஸ்கோவில் இந்திய - சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இத்தகவல்களை மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் அடுத்தகட்ட பேச்சு தொடர்பாக சீன ராணுவத்திடம் இருந்து தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.