

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 விவசாய மசோதாக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னவென்பதை எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்து வரும் நிலையிலும், விவசாயிகள் போராட்டத்தைக் கையில் எடுத்து வரும் நிலையிலும் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்று கூறிவருகிறது.
இந்நிலையில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்த பிரியங்கா காந்தி வதேரா, ஹிந்தியில் மேற்கொண்ட ட்விட்டர் பதிவில், “இது விவசாயிகளுக்கு கடினமான காலக்கட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்து அரசு விவசாயக் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும், ஆனால் எதிர்மறையாக நடக்கிறது.
மாறாக பாஜக ஆட்சி தங்களது கோடீஸ்வர பணக்கார நண்பர்களை வேளாண் துறைக்குள் நுழைப்பதில்தான் ஆர்வமாக உள்ளது.
விவசாயிகள் குரல்களை கேட்கக் கூட விரும்பவில்லை” என்று சாடியுள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கியாகி விட்டது.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, இந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. இதன்படி ஒரு பெரிய வணிகர், பெரிய நிறுவனம் மண்டியைத் தொடங்கிவிடும். விவசாயப்ப்பொருட்களுக்கான விலையில் தகராறு ஏற்பட்டால் அதை அதிகாரிகள் தலையிட்டு தீர்ப்பார்களாம். இது எப்படி இருக்கு? என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.