

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் செப்.17ம் தேதி நாடு முழுதும் பாஜகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுதும் தலைவர்கள் உட்பட பலரும் மோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பிரதமர் மோடி பிறந்த தினத்தை ‘வேலையின்மை’ தினமாக அனுசரித்து மோடியின் உருவபொம்மையையும் எரித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத 11 பேர் மற்றும் அடையாளம் தெரிந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாம்லி மாவட்ட பாஜக தலைவர் சத்யேந்திர தோமர் புகார் அளித்ததன் பேரில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகம் அறியப்படாத பாரதிய சமாஜ் ரக்ஷக் யுவ மோர்ச்சா என்ற இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவர் பிரின்ஸ் கோரி என்பவருடன் சேர்த்து மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 147 (கலவரம் செய்தல்), 188 (உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜின்ஜானா காவல் நிலைய எல்லைக்குள் வரும் தர்காபூர் கிராமத்தில் நடந்த இந்த உருவபொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.