

பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப் பகுதியில் 23 கிலோ ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.115 கோடி ஆகும்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) பஞ்சாப் எல்லைப் பகுதி டிஐஜி ஆர்.எஸ்.கட்டாரியா நேற்று கூறியதாவது:
அமிர்தசரஸ் செக்டார், தெக்கலா எல்லைச் சாவடி அருகே பிஎஸ்எப் மற்றும் சுங்கத் துறையினர் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலர் இந்தியப் பகுதிக்குள் பொட்டலங்களை வீசினர். அவர்களை நோக்கி பிஎஸ்எப் வீரர்கள் சுட்டபோது, அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திலிருந்து தலா 1 கிலோ எடை கொண்ட 23 ஹெராயின் பொட்டலங்கள், பாகிஸ்தான் ‘சிம்’ கார்டுடன் கூடிய மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு இதுவரை 192 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.